கொல்கத்தாவில் பயிற்சி டாக்டரை கொடூரமாக தாக்கிக்கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.
இப்படிப்பட்ட சைக்காட்டிக்கான பாலியல் குற்றங்கள் புரியும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்து காலம் முழுக்க நல்லொழுக்க பாடம் எடுப்பதில் இருக்கும் மனிதநேய எண்ணம் சத்தியமாக விளங்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் பெற்றோரே தங்கள் பதினாறு வயது மகளை தவறான வழியில் ஈடுபடுத்திய கொடுமையான செய்தி வெளிவந்தது. கேரளாவில் பதின்வயது சிறுமியை ஐந்து ஆண்டுகளாக துன்புறுத்திய வழக்கில் இதுவரை 57 பேர்(3 மைனர் உட்பட) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரண்டு செய்திகளிலும் இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் வெளி வர இருக்கிறதோ தெரியவில்லை.
ஒன்று மட்டும் உறுதி.
பாலியல் வன்முறைகளுக்கு தண்டனைகள் வலுக்கப்பட்டால் தான் குற்றப்பிண்ணனி குறைய கொஞ்சமாவது வாய்ப்புள்ளது.
இன்னொன்றும் உறுதி.
நம் வீட்டு குழந்தைகளுக்கு ‘குட் டச் பேட் டச்’ சொல்லி கொடுப்பதைக் காட்டிலும் மிகவும் அவசியமானது பெரியவர்களுக்கான கட்டாய அடிப்படை பாலியல் கல்வி.
ஏனெனில், குழந்தைகள் மீதான வன்முறை குற்றங்களில் நான்கில் மூன்று பங்கு குற்றவாளிகள் குழந்தைகளின் நன்கறிந்த உறவினர் மற்றும் நட்பு வட்டம் தான் ! அதற்காக ஏதோ இப்போது தான் இதெல்லாம் நடக்கிறது என்றில்லை. விழிப்புணர்வின் காரணமாக இப்போது அதிகம் தெரிகிறது. அவ்வளவுதான். நம்மூரில் அந்த அளவிற்கு ‘மானம்-மருவாத-கவுரவம்’ ஸ்டிக்மா வேலை செய்கிறது. பாலியல் துன்புறுத்தல் என்றில்லை. சீண்டல்கள் கூட அடிப்படை பாலியல் அறிவின்மையால் விளையும் குற்றம் தான்.
‘பஸ்ல யாரும் உரசாம வரணும்னா இங்க பொண்ணுங்க இன்குபேட்டர்ல தான் வரணும்’ என்ற சுஜாதாவின் வசனம் வெறும் பொழுதுபோக்கிற்காக எழுதப்பட்டதல்ல!
நிற்க,
தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவானதால் அது நாள் வரை காதலித்தவரை சைக்காட்டிக்காக விஷம் கொடுத்த கொன்ற காதலிக்கு தூக்கு தண்டனை கொடுத்துள்ளது கேரள நீதிமன்றம். நம்பிக்கை துரோக அடிப்படையிலும், கொடூர எண்ணத்தோடு தெளிவாக திட்டமிட்டதன் அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ள தண்டனை என்கிறது தீர்ப்பு.
என்றால், மாட்டிக்கொள்ளவா போகிறோம் என்று தெரிந்தே பாலியல் குற்றங்களை செய்பவர்களின் மரமண்டையில் பின்விளைவுகள் பற்றின தெளிவை வலுவாக ஏற்படுத்தாமல் இருப்பதும் ஒரு வகையில் குற்றம் தானே?
Leave a Reply