தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

அம்மா தெரிகிறாள்..

போன ராத்திரி
கட்டில் தலைமாட்டில் விடுபட்ட
கண்ணாடி குடுவையை
காலையில் வீடெங்கும் தேடியபடி

அம்மா தெரிகிறாள்…

தரையில் காலார
உள்மூச்சு வாங்கும் இசையோடு
உள்ளுக்குள் வாயசைத்தப்படி
தினமலரை புரட்டும்

அம்மா தெரிகிறாள்..

எதற்காகவோ ஏதோவொரு
ரசீதை தேட சென்றவள்
பீரோவை இரைத்துப்போட்டு
இடையில் தட்டுப்பட்ட
பழைய ஆல்பமொன்றில்
மருகி தொலைந்தபடி

அம்மா தெரிகிறாள்..

பழகிய தெருக்களின்
நினைவு அகலாத
கனவு அடுக்குகளில்
சிக்கித் திரிகின்ற
என்னை கவனித்தபடி

அம்மா தெரிகிறாள்..

தூக்கம் கலைந்து
நடுவறைக்கு வந்ததும்
‘பாப்பா.. இத்தன மணிக்கு எழுந்துவந்தா
உடம்பு என்னத்துக்கு ஆகும்’
என்னையே எதிர்பார்த்து முனகியபடி

இன்னமும்

அம்மா தெரிகிறாள்..

-ப்ரீத்தி வசந்த்

Image – Magdalena Wozniak Melissourgaki

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா!