தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

சுவர்கிறுக்கல்கள்

படுக்கையறையில்

குறுக்கும் நெடுக்குமாக தானிட்ட

கலர் கலர் கோடுகளுக்குள்

வீட்டு மாடியில் ஆட்டம் போட்ட சூரியனையும்

டிவியில் வெடித்து சிதறிய எரிமலையையும்

கண்டு சிரித்தது குழந்தை

தோசையம்மா தோசை பாட்டு

பார்த்த ஞாபகத்தில்

பாட்டில் வந்த பாப்பாவை

சுவற்றில் கோணலானதொரு சிறு

வட்டமாயிட்டது குழந்தை

எப்படி யோசித்தாலும்

மனதை விட்டகலாத

Z ஃபார் ஜீப்ராவை

பெரியதும் சிறியதுமாய்

அடுக்கடுக்காய் கோடுகளிட்டு

தோசைப்பாப்பாவுக்கு பக்கத்தில்

நடமாட விட்டது குழந்தை

அதற்குள்

எரிமலை முச்சூடும் வெடித்து சிதறிவிட

ப்பூ ப்பூ என்று நெருப்பை ஊதியபடியே

ஓடிப்போய் கண்ணாடியிலிருந்த

அம்மாவின் ஸ்டிக்கர்பொட்டுக்களை

எரிமலைக்கோடுகளுக்கு மேலிட்டு

காட்டுப்பூக்களாக்கியது குழந்தை

இல்லாது போன எரிமலையை

கேலி செய்த சூரியனை

பாதியில் வெட்டி

தோசைப்பாப்பாவிடம் கொடுத்து

அடுப்பில் சுட்டது குழந்தை

தோசை வாசனை பிடித்துப்போக

ஆசையாய் இன்னொன்று கேட்ட

குழந்தைக்கு பூசை கொடுக்க

வந்த தோசையம்மாவிடமிருந்து

ஜீப்ராவில் ஏறி

காட்டுப்பூக்கள் வழி

அவசரகதியில் ஹாலுக்கு

தப்பிச்சென்ற குழந்தை,

இந்தமுறை

ஒரு பெரியக்கோடு போட்டு

குச்சிக்குச்சியாய் கைக்கால்களிட்டு

தானே அம்மாவாகி

“அம்மாவுக்கு நாலு .. இப்போ என்ன பண்ணுவீங்க”

என்றபடி

தோசை சூரியனை

அள்ளி சாப்பிட்டு

ஆர்ப்பரித்தது குழந்தை.

****************************************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *