Your cart is currently empty!
என் கவிதைகள்
சிறு வயதிலிருந்தே சொற்கள் மீது ஒரு தீராக்காதல் உண்டு. தேங்கி நிற்கும் மழை நீரில் தெரியும் வானவில்லை போல கோர்வையாக சேர்ந்துக்கொண்ட சொற்களில் உள்ள மயக்கம் தானாகவே எனை ஈர்த்துக்கொண்டது. அதற்கு மிகப்பெரிய காரணம், என் அப்பா.
ஒரு நாள் வீட்டுப்பாடம் செய்வதற்காக ரஃப் நோட் தேடி அலுத்துப்போய் மேஜை மீது தூசிப்படிந்துக்கிடந்த பழைய டைரி கண்ணில் படவும் எடுத்து புரட்டினேன். மளிகை கணக்கு, வாடகை பாக்கி, இத்யாதி குறிப்புகளிற்கிடையில் ஒரு பக்கத்தில் குறுக்குவாட்டாக பச்சை நிற இங்கில் அப்பா எழுதியிருந்த “நான் சிம்மம்; என் புண்களை ருசிப்பதிலும் எனக்கு சுகமுண்டு” என்ற மூன்று வரிகள் என்னை ஸ்தம்பிக்க செய்தன. இந்த கவிதையை படிப்பதற்கு முன் படித்தற்கு பின் என அப்பா எனக்கு இரு வேறு மாதிரியாக தெரிந்தார். இந்த வேறுபாடு பின்னாட்களில் அவர் மீதான பல முரண்களை நேர்மறையாக எனக் அணுக வைத்தது. என்னை பொறுத்த வரையில் நான் படித்திலேயே உலகின் மிகச்சிறந்த மிகச்சிறிய சுயசரிதை இதுவாகத்தான் இருக்கும். சொற்களுக்கு இத்தனை பலமா. தொய்ந்து போன சராசிரியில் சிக்கி தவிக்கும் மனித மனத்தின் சொல்லப்படாத துயரங்களையும் ஓலங்களையும் சொற்களால் இத்தனை வலிமையாக கடத்தமுடியுமா என்று நான் திகைத்ததும் அப்போது தான். அன்றிலிருந்து தான் எனக்கு கவிதையின் மீது விவரிக்கமுடியாத லயிப்பு ஏற்பட்டது . இன்று வரை அந்த லயிப்பு ஏதோவொரு வகையில் தினம்தினம் என்ன சுயத்தை மீட்டெடுத்தப்படி என்னை உயிர்ப்பிக்கிறது.
என் கவிதைகள் அதிகமாக அணுகியது காதலையும் துயரத்தையும் தான். இன்று வரை இவை இரண்டாலும் நேர்மறையாக பாதிக்கப்பட்டதின் வெளிப்பாடோ என்னவோ அதிலும் என்னை கேட்காமலயே என் கீபோர்ட் அதிகம் தட்டுவது காதலை தான் 🙂
சொல்லப்போனால் இவ்வுலகில் இவ்விரண்டைப்போல இதயத்தை வேறேதும் நிரப்புவதில்லை.
ஆழிப்புயலில் சிக்குண்ட கப்பலின் மாலுமி ஆகாயத்தை நோக்கி கைக்கூப்பி மண்டியிடுவதைப் போல காதலிடமும் துக்கத்திடமும் மனது சரணாகதியடைகிறது.
இரண்டும் படுத்தும் பாடு அத்தனை பெரிது! அப்பாவின் சிரிப்பைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிறது. அம்மாவின் புலம்பலை கேட்டு இரண்டு வருடங்கள். உண்மையில் , காதல் துயரம் இவை இரண்டிற்கும் காலம் ஒரு பொருட்டல்ல. பொருட்டே அல்ல! சதா இயங்கிக்கொண்டேயிருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் காலத்திற்கு ஒப்பாகலாம்.
ஒரு முத்தம் .. எதிர்பாராமல் நிகழும் ஒரு தொடுதல்.. இப்படி காதல் ஏதோவொரு வகையில் தினம் ரட்சிக்கப்பட்டு தன்னை நீட்டித்துக்கொள்வதைப் போல எங்கிருந்தோ ஒரு ஞாபகம்.. சின்னதாக துளிர்விடும் கண்ணீர் என துயரமும் காலவரையின்றி நம்மை ஏதோவொரு வகையில் நீட்டித்துக்கொள்(ல்)கிறது.
இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க நினைப்பது பிழை. முயற்சித்தல் வீண். சிலாகித்தல் அநாவசியம். விலகும் வரை பொறுத்திருத்தல் அஞ்ஞானம். உதறி வெளியேறுதல் அபத்தம். நிகழ நிகழ இரண்டிலும் நிறைவாக இயங்குதலே அனுபவம். அன்பே அந்த அனுபவத்திற்கு ஆதர்சம். அன்பு சகலத்தையும் தாங்கும்* காலம் வாய்ப்பின். சகலமும் அன்பு ஆற்றும். ‘ஒரு வழி ; ஒரு வலி ’என சுழலும் காலமார்க்கத்தில் போகப்போக இந்த அனுபவமே அர்த்தமாகும். என்ன ஒன்று, இந்த காலானுபவத்தில் நோயும் அன்பே மருந்தும் அன்பே. அன்பே சர்வம். அன்பே சர்வம். அன்பு ஒன்றே சர்வம் ! அதிலே தான் என் சொற்களின் பயணமும்!
முகங்கள்
வெட்டப்பட்ட மரங்கள் பேசினால் – முதல் பரிசு பெற்ற கவிதை
அப்பாவும் தேவதையும் – அவள் விகடன் மீடியா பக்கத்தில் வெளியானது