Your cart is currently empty!
அப்பாவும் தேவதையும்
அவள் விகடன் மீடியா பேஜ் வெளீயானது
அப்பாவும் தேவதையும்
வாசல் வழி தலை தெரிய
விக்கித்து நின்றார் அப்பா.
லாவகமாய் அவரது
கைகளில் வந்து விழுந்தது
ஒரு தேவதை!
பால் குடித்து முடித்த
ஒரு மதியம் அள்ளி எடுத்து
கொஞ்ச வந்தார் அப்பா.
முதன் முதலாய் ஏறெடுத்து
பார்த்து அனுமதி தந்தது தேவதை!
வெளி உலகம் பிழிய
களைத்து போய்
வீடு வந்திருந்தார், அப்பா.
இதழ் குவித்து ‘ப்பா’ என்று
அவரைக்கட்டிக் கொண்டது தேவதை!
விளையாடி முடித்து
தூங்கி போனது தேவதை.
சத்தம் போடாமல்
மெதுவாக தன் உலகை
மூடி வைத்தார் அப்பா!
மடிகுழியில் படுத்துக் கிடந்தது தேவதை
ஆடாமல் அசையாமல்
தலை கோத ஆரம்பித்திருந்தார் அப்பா!
எல்லா பொம்மைக்கும்
ஊட்டியது தேவதை
அப்பாக்கு ? என்று கேட்க
சட்டென்று கன்னத்தில்
முத்தமிட்டது தேவதை!
விரல் பிடித்து நடக்க
ஆரம்பித்தது தேவதை -தன்
மோதிரத்தை கழட்டி வைத்து
கெட்டியாக கை பிடித்து
கொண்டார் அப்பா!
ஒரு காகிதத்தில் வீடு வரைந்து
பூ போட்ட உடையில்
அப்பா அம்மாவுடன் கை
கோர்த்திருந்தது தேவதை
அன்றே அதை தன் மடிக்கணினி
படமாக்கினார் அப்பா!
ஏதேதோ உலகியல் பேச ஆரம்பித்திருந்தது தேவதை.
கண் கொட்டாமால் ரசித்துக் கேட்டார் அப்பா!
கல்வி கற்க ஆரம்பித்தது தேவதை.
கருத்து சொல்லத் தயாரானார் அப்பா!
கண்ணாடி பார்க்க ஆரம்பித்தது தேவதை.
இரவு முத்தங்களை
இயல்பாக குறைத்து
தோள் தள்ளி
நடக்க ஆரம்பித்தார் அப்பா!
ஒரு நாள் அழுது
வீடு திரும்பியது தேவதை.
காரணம் கேட்காமல்
மௌனமாய் அணைத்து
தேற்றினார், அப்பா!
வளர்ந்து நின்றது தேவதை.
அவளுக்கு எல்லாம் தெரியும்
என்றது உலகம்!
நாள் குறித்து
நல்லவன் ஒருவனை
கை பிடித்து கொடுத்தார், அப்பா.
தேம்பி அழுது அவன் வீடு போனது தேவதை!
அன்றிரவு முழுவதும்
தன் மடிக்கணியை
மூடவே இல்லை, அப்பா !
*********************
Leave a Reply