Your cart is currently empty!
கிரிஜா
தென்றல் இதழில் வெளியானது
கிரிஜா
ப்ரீத்தி வசந்த்
கிரிஜா, அவள் வயதிற்கு மிக பாந்தமாக இருப்பாள் .
அழுக்கு சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரள வைக்கும்.செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான்.
கிரிஜாவை நான் முதன் முதலில் அவள் அலுவலக இடத்தில் வைத்து தான் சந்தித்தேன். அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிக் கூட்டம். ‘என்ன,ஏது’ என்று விசாரிக்க முடியாத அளவிற்கு ‘..ச்சூச்சோ’ கொட்டும் வெறும் கூட்டம். கூட்டத்தில் யாரோ ஒரு மீசைக்காரர், “அட..என்னப்பா இங்கக்கூட்டம்?போங்கப்பா…போய் வேலைய பாருங்க”‘,என்று அதட்டவும், மெல்ல நகர்ந்த கூட்ட இடைவெளியில் தான் கிரிஜாவின் அழுது அழுது சிவந்த கண்களை காண நேர்ந்தது.பேசிக் கொண்டிருந்த பாடாவதி மீட்டிங்கை துண்டித்து தானாகவே அவள் பின் சென்றது என் கைகளும் கால்களும் .
“யாருமா நீ?” என்று நான் கேட்டு முடிப்பதற்குள் அவசர கதியில் அங்கே வந்த ஒரு ரயில்வே போலீஸ்காரர் கிரிஜாவை வேறுப் பக்கம் இழுத்து சென்று விட்டார்.
அன்றைய சந்திப்பிற்குப் பிறகு இன்று தான் அவளை மறுபடி பார்க்கிறேன்.
கிரிஜா – எங்கோ தொலைந்து தாம்பரம் – பீச் மின்சார ரயில் பிளாட்பாரத்தில்(அவளின் அலுவலகம்!) காண கிடைக்கப்பெற்ற, பெயர்தெரியா பதின் பருவ இளவரசி!! மானசீகமாக அவளுக்கு நான் வாய்த்த பெயர் கிரிஜா.
இதோ, இப்போது வருவது போல சிலசமயம் தனியாக வலம் வருவாள். பல நேரங்களில் தன் சக நண்டு சிண்டு ‘சிப்பாய்களோடு’ வலம் வருவாள். முதன் முதலில் அவளை பார்த்ததிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து இப்போது தான் பார்க்கிறேன் . ஆனால் போன முறை பார்த்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாள் கிரிஜா. முன்பை விட தெளிவாக, அதே அழகோடு மிக நேர்த்தியாய் இருந்தாள். கண் முன்னே வேண்டுமென்றே பறந்து நம் கண்களை சுற்றவிட்டு பின் பறந்து போகும் பட்டாம்பூச்சியை போல அங்குமிங்கும், முன்னும் பின்னும், என்று எங்கள் கம்பார்ட்மெண்டில் , இருப்பிடத்தை சுற்றி வந்து சில்லாப்பாய் பல வித்தைகளை காண்பித்திருந்த கிரிஜாவை சிரமப்பட்டு வாய்மூடி பார்த்தேன் .
“பாவம் எந்த ஊரோ..?.யார் பெத்த பிள்ளையோ..?பொம்பள பிள்ளை இப்படி பிழைக்குதே !”,
என்று என் எதிரே இருந்து சத்தமாக ஒரு பெரியவர் ‘நக்கீரனில்’ இருந்து வெளிப்பட்டு உச்சு கொட்டினார் .
இன்னொரு நாற்பது வயது காரரோ கிரிஜாவை அங்கம் வாரியாக நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். நான் அவரை பார்த்து திரும்பவதற்குள் அவள் சட்டென என்னருகே வந்து
“அரெய் சாரே ..”
என்று கணீரென்று கூவினாள். அதுவரை அவளை அவ்வபோது பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் இப்போது அடித்து போட்டது போல் அவளை பார்க்க ஆரம்பித்தோம் .
அவ்வளவுதான்!லாவகமாக தன் முதுகின் பின்னிருந்து நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய வளையத்தில் தன்னிச்சையாக தன்னை மாட்டிக் கொண்டு சுற்றி சுற்றி வந்து ஆடி பாடி வந்தாள். அதையே நாங்கள் கண் கொட்டாமல் பார்க்க,இரு கைகளையும் பிண்ணி பின்னால் கொண்டு போய் வணக்கம் என்றாள் . இப்போது ‘நக்கீரர்’ வாயில் ஜொள். பின் அப்படியே பின்னால் வளைந்து தலையால் சுற்றி வந்து நிமிர்ந்து சலாம் போட்டு இடுப்பில் இருந்து ஒரு அழுக்கு கைப்பையிலிருந்து ஒரு சுருக்கு பையை எங்கள் அனைவரிடமும் மிடுக்காய் காண்பித்தாள் . ‘நக்கீரர்’ முதலில் பாய்ந்து ஒரு ருபாய் இட ,அவளை அங்கம் வாரியாக நோட்டம் விட்டவரோ வேறு பக்கம் திரும்பி கொண்டார் .
நானோ இந்த இளம் வித்தைக்காரியின் மாயத்தில் இருந்து மீளாமல் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருக்க, ‘நக்கீர பெரியவர்’ அதட்டும் தொனியில் ,
“ஏன் சார்..பார்த்துகிட்டே இருக்கீங்களே.. பாவம் ..எதையாவது போட கூடாதா ?” என்றார்.
“அட போங்க சார்! இப்போ இவ வருவா..அப்புறம் அடுத்த ஸ்டேஷன்ல இவ ஆத்தா அப்பன் வருவான்…எல்லாருக்கும் போட்டுட்டே இருந்தா நாம எங்க போறது?!ஏதோ வித்தையா …பாத்தோமா.போனோமானு இருந்துடணும் .. இது தான் நம்ம பாலிசி!”
என்று ஒரே மூச்சில் தன் அக வாழ்வின் தத்துவ நெறியை எடுத்து விளக்கினார்,இவ்வளவு நேரம் அவளை கண் கொட்டாமல் சகட்டு மேனிக்கு பார்த்துத் தீர்த்த ‘நல்லவர்’ .
இதெல்லாம் கிரிஜா காதில் ஏன் விழ போகிறது?!. அவள் எங்களை கடந்து போய் இதே வித்தையை சற்றும் களைப்பில்லாமல் அடுத்த இருக்கையில் காட்ட துவங்கியிருந்தாள்.
கிரிஜாவின் வேலை நேரமும் என் அலுவலக பிரயாண நேரமும் கிட்டத்தட்ட ஒன்று தான். எனவே அவளை பார்க்காமல் விட்டதில்லை . தினம் நான் ஏறும் கம்பார்ட்மெண்டிலொ, ஏறும் போதோ இறங்கும் போதோ ,என்னை கடந்து வேறெங்கோ செல்லும் போதோ என அவளை எப்படியாவது ஒரு நாளில் குறைந்தது இரண்டு மூன்று தடவையாவது பார்த்து விடுவேன் .இத்தனைக்கும் நான் அவளோடு நேரிடையாக சம்பாஷனைகள் மேற்கொண்டதே இல்லை .அவளுக்கு தமிழ் தெரியாது . எனக்கு அவளின் மொழி பெயரே தெரியாது .அதனால் இன்னும் இலக்கணத்தில் பெயரிடபடாத ஒரு ஈடுப்பாட்டோடு அவளை தங்கு தடையின்று நுட்பமாக ‘பார்வையிட’ தொடங்கி இருந்தேன். அவளை எத்தனை முறை நான் பார்த்திருந்தாலும் அவளுக்கு ஒரு ரூபாய் கூட நான் தர்மமிட்டதில்லை. ஏனோ அவளுக்கு பணமிட நெருடலாய் இருந்தது. அதனால் அரும்பாடுபட்டாவது அவளது அருகாமையை தவிர்த்துவிடுவேன் .
இப்படித்தான் கொஞ்ச மாதம் முன் திடீரென்று கண் முன்னே தோன்றி “சாரே” என்றாள் . ஒரு நிமிடம் நானும் அவளும் நேருக்கு நேர் சந்தித்து கொள்கிறோம். அவள் கண்களின் காருண்யம் நொடிக்கு நொடி இறங்கி, கடைசி அறுபதாவது நொடியில் என்னை பற்றி ஏளனமாக மாறி படாரென்று விலகி சென்றாள் .அன்று அவளை பின்தொடர்ந்து இரு சிப்பாய்கள் வேறு. அவர்களிடம் கிரிஜா என்ன சொன்னாளோ தெரியவில்லை , அந்த இருசிப்பாய்களில் ஒருவன், என் காதருகே வந்து கடிப்பது போல் பாவனை பண்ணி விட்டு தன் ஒட்டல் போட்ட பின்புறத்தை காண்பித்து பளிங்கு காண்பித்து விட்டு ஓடிவிட்டான் . அப்போது அந்த இடத்தில் நான் நெளிந்தாலும் ,இப்போது நினைக்கும் போது சிரிப்பாகத் தான் இருக்கிறது. கிரிஜா என்னை மிக மட்டமாக நினைத்திருக்கக் கூடும் .எனினும் அவளுக்கு காசிடுவதில் என் மனம் உடன்பட மறுத்ததால் அலட்டிக் கொள்ளாமல் அவளை அவளின் வருகையை ரசித்துக் கொண்டிருந்தேன் .
கொஞ்ச நாள் கழித்து அவளை பார்க்க நேர்ந்த போது என்னவோ மாறி இருந்தது . முன்பை போல அவ்வளவு சூட்டிகை இல்லாமல் ,என்னவோ போட்டு இம்சிப்பது போல ஒரு வித கலவரத்தோடு சுற்றிக் கொண்டிருந்தாள் . பிறகு தான் கூர்ந்து கவனித்தேன் .இதுவரை அவளின் கிழிந்த சுடிதார் மறைத்த இடங்களை இழுத்து சொருகி பிடித்து கொண்டிருந்த ஒரே ஒரு ஊக்கும் வாய் பிளக்க எத்தனித்திருந்தது .இதுவரை நான் ரகசியாமாக ரசித்து வந்த பதின் பருவ சிறுமி இளம் பருவ பெண் ஆகியிருக்கிறாள் என எனக்கு உரைத்ததும் சில திகிலான சிந்தனைகள் என் ஆழ் மனதில் உலுக்கின .
இந்த பெரு மாற்றத்தை இப்பெண் எவ்வாறு எதிர்கொள்கிறாள்? யாரிவள் அருகில் இருக்கிறார்கள்?ஆத்திரம் அவசரத்திற்கு இவள் யாரை நாடுவாள் ?எதை பேணுவாள்?எப்படி காப்பாள்? இவளை சுற்றி விமர்சிக்க ஆண்கள் இருப்பார்கள். ஆனால் விவரிக்கத தோழிகள் உண்டா?
மொத்தத்தில் இவள் யார் ? இவள் எப்படி இந்த இடத்தில் தன்னை இத்தனை காலம் நிறுவிக்கொண்டிருக்கிறாள்? இன்னும் எத்தனை காலம் இவளுக்கு இப்படி கழியும். நான் ஏன் இவளை பார்க்கிறேன். நான் மட்டுமா பார்க்கிறேன். அதோ நக்கீரர் பார்த்தாரே! ச்ச அவர் பார்ப்பதும் நான் பார்ப்பதும் ஒன்றா? அதெப்படி ! நான் அவளை நல்ல விதத்தில் தான் பார்க்கிறேன். மண்ணாங்கட்டி அது அவளைக்கேட்டால் தானே தெரியும்..
ச்ச…என்ன ஒரு விகார மனது .!’
“சார் ..கொஞ்சம் தள்ளுங்க”
“..”
“சார்” என்ற அந்த அதிகார குரலில் என் சிந்தனைகளில் இருந்து மீண்டு குரல் வந்த திசை எதிர்நோக்கினேன் .
“என்ன?”
“கொஞ்சம் தள்ளுங்க சார் ..உங்களதான் !” என்றது ஒரு உருவம் .
நான் பரவலாக உக்காந்திருந்த இடத்தில் கொஞ்சம் மிச்சம் பிடித்து நகர்ந்து கொள்ள என் அருகில் அமர்ந்து கொண்டான் அவன் . மடிகணினி , அலைபேசி ,காதில் இணைக்கப்பட்ட இசைக்கேட்பான் என நவீன யுகத்தின் கவச குண்டலங்கள் எதுவும் அணிந்திராத அதிசிய இளைஞன் அவன் . வெளியூர் வாசனை, சிநேகமான முகம், எப்போதோ குடித்து நிறுத்தப்பட்ட சிகரட் பழக்கத்தின் கறுத்த உதடுகள். கைப்பை ,புத்தகம், சாப்பாட்டு கூடை என பிரயாண இத்யாதிகள் எதுவும் இல்லாத சீக்கிரத்தில் கண்டு கொள்ளப்படாத எங்கேயோ ஏறி எங்கேயோ இறங்கும் ஜனக்கூட்டத்தில் கலந்து காணாமல் போகும் ஒரு அசாதாரண இளைஞன் .வெகு சீக்கிரமே எங்களின் தினசரி பயணத்தில் சந்திக்கும் பெயர் தெரியாத பரிச்சயமான முக வரிசையில் அவனும் இணைந்துகொண்டான் .!அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் பேச்சு கொடுக்கமாட்டான். இத்தனை விஷயத்தில் மாறுபட்டு இருந்தாலும் அவன் ஒரு விஷயத்தில் எங்களை மாதிரி இருந்தான் . அது – கிரிஜாவை ரசிப்பது !
முதல் முறை அவள் வித்தையை பார்த்த போது என்னை போலவே கண் கொட்டாமல் பார்த்தான் . என்னை போலவே காசிடாமல் நகர்ந்தும் கொண்டான். நாளுக்கு நாள் அவள் வருகையை அவன் எதிர்பார்ப்பது அப்பட்டமாகவே தெரிந்தது. கொம்பார்ட்மென்டின் முன்னேயும் பின்னேயும் அவளைத்தேடியே தேடி அவன் கண்கள் அலைபாய்ந்ததை எங்களில் சிலரும் தினம் கவனிக்கவே செய்தோம். நான் இன்னும் கொஞ்சம் தீவிரமாக. .
திடீரென்று ஒரு நாள் வித்தை முடிந்ததும் அவளுக்கு காசிடுவது போல அவளின் மிருதுவான கைகளை என் கண்ணெதிரே ஸ்பரிசிக்க தொடங்கினான் .’ என்ன ஒரு திமிர்.. சுரீர் என்று ஏதோ சொல்ல போகிறாள் என் கிரிஜா’ என்று நினைத்து அவளை பார்த்தால் ,வெட்கத்தில் நெளிந்து கொண்டு ஓரிரு நொடிகளில் லாவகமாக ஆனால் மிருதுவாக அவள் கைகளை விலக்கிக் கொண்டாள் அவள் !
அது முதல் இவன் அவளை யாருக்கும் தெரியாமல் கண்ணால் ஜாடை பேசுவதும் (நான் பார்த்துக் கொண்டு தான் இருந்தேன் ) அவள் கூச்சத்தில் நெளிவதும் , திரும்ப கண் மொழி பேசுவதும் தொடர ஆரம்பித்தது .
நாளைடவில் கிரிஜா எங்கள் கம்பார்ட்மெண்டில் ஏறியதும் அவன் இருக்கிறானா என்பதை முதலில் நோட்டமிட்டுக் கொண்டு , அவன் இருந்தால் மிக பாங்காக அவன் அருகில் உட்கார தொடங்கினாள் .
ஓரிரு நாட்களில் இது எங்களுக்குள் தற்காலிக சலசலப்பை உண்டாக்குவதை உணர்ந்த அவள் , ஒரு ஓரமாக கம்பியின் கடைசியில் நிற்க , இவன் அவளின் அருகே நின்று கொண்டு இருவரும் கை பிடித்து பேசலாயினர் .
“என்ன கன்றாவிங்க இது ..?”என்றார் நக்கீரர் .
“என்ன எழவோ..!எது எதோட சேருதோ..!ஒன்னும் புரியல..!!” என்று அருகில் இருந்தவர் சொல்ல இன்னொருவர் ,
“ஆட்டத்த நிப்பாடிட்டா பாத்தீங்களா ..?” என்றார் .
“ம்ம்..அந்த பொடியனுங்கள வேற காணும்..இவள எங்க காண்றது ..ஆமா இந்த பய எங்க இறங்குறான்?” என்றதும் எல்லாரும் ஒரே வேளையில் என்னை பார்த்தார்கள் .
“எனக்கு தெரியாதுங்க.. நீங்க இறங்குன அடுத்த ஸ்டேஷன்’ல நானும் இறங்கிடுவேன்..” என்றதும் சப்பென்று ஆகி விட்டது அவர்களுக்கு .
“சார் ரொம்ப ‘பார்த்தார்’. ஒன்னும் வேலைக்கு ஆகல..நேத்தைக்கு வந்தவன் எப்படி ஜரூரா இருக்கான் பாத்தீங்களா?”
என்று என்னைப்பார்த்து நக்கலாக கண்ணடித்து ஒரு நாற்பது வயதுக்காரர் சொல்ல கமுக்கான சிரிப்பலை .
“சார் என்ன பேசறீங்க..?அந்த மாதிரி எல்லாம் இல்லை..!” என்று நான் சொல்வதைக்கூட காதில் வாங்காமல்
“ஹீ ஹீ.. சரி சரி..” என்று இளித்துக்கெடுத்து அனைவரும் அவரவரது வேலையில் மூழ்கி போனார்கள் . எனக்கு என்னெமோ போல் ஆகிவிட்டது !.
‘ச்ச .. இனிமேல் இந்த கம்பார்ட்மெண்டில் ஏறவே கூடாது’ என ஒரு மனதாக முடிவெடுத்தேன் .ஆனால் என் கிரிஜா.. கிரிஜாவை காணமல் எப்படி இருப்பது? இப்போது அவள் என்ன செய்கிறாள் ?
கண்ணோக்கி பார்த்ததும் அதிர்ந்து போனேன் .
தங்களை யாருமே கவனிக்கவில்லை என்ற சிந்தையில் காற்று புகா இடைவெளியில் கண்ணா பின்னாவென்று அலைந்த அவளின் கூந்தலின் மறைவில் காதல் செய்து கொண்டிருந்தனர் இருவரும் !
மனம் கனத்து போய் குனிந்து கொண்டாலும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை .
‘பளார்’ என்று அவனை அறைந்தால் ?
‘யார் சார் நீங்க ?’ என அவன் என்னை கேட்டு விட்டால் ?
‘கேட்கட்டுமே’.. அரை வாங்கிய பின் தானே கேட்பான் ?’ சுரீர் என்று உரைக்கட்டும் ..இப்படி அபலை பெண்களை ஆசை காட்டுவதை ..
‘அபலையா ?மண்ணாங்கட்டி ! நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்’ என அவள் பாஷையில் கிரிஜா என்னிடம் சொன்னால் ?
பல்வேறு காட்டமான சிந்தனைகளில் சிக்கிய மனதின் அழுத்தத்தைகட்டுப்படுத்த அடுத்து வரும் ஸ்டேஷனில் இறங்கி விடலாமென எழுந்து கம்பியோரம் நின்று கொண்டேன் . கிரிஜா என்னை கண்டு கொள்ளவே இல்லை .. எப்படி கண்டு கொள்வாள் ? அவள் பார்வையில் நான் ஒரு மகா கஞ்சன் – தேகம் நோக்குபவன் – ஒரு சராசரி ஆண் ! ச்ச.. !
இவன் மட்டும் என்னை சிநேகமாக பார்த்தான் . !
ஆச்சரியமாக பதில் பார்வை பார்த்துவிட்டு ரயில் நின்ற இடத்தில் இறங்கி கொண்டேன் நான் !
கொஞ்ச நாளைக்கு அவளை பார்க்கவில்லை .. பழைய கம்பார்ட்மெண்டிலும் ஏறவில்லை . பின் ஓரிரு மாதம் கழித்து என்னை அவ்வபோது அசௌரியமாக அரிக்கும் மனதின் லஜ்ஜையை போக்க பழைய இடத்தில போய் அமர்ந்தேன் ..
சண்டையிட்டு மீண்டும் திரும்பிய பங்காளியை போல நலம் விசாரிப்புகள் என்னை என்னவோ செய்ய , சற்று நேரம் அவர்களோடு தினசரியில் என்னை ஆசுவாச படுத்திக்கொண்டு கொஞ்ச நேர இடைவெளி விட்டு அவர்கள் இருவரையும் தேட ஆரம்பித்தேன் ..
நான்கைந்து ஸ்டேஷன் வரையில் யாரையும் காணவில்லை !
அவனை , அவளை , அவளின் ஊர்க்காரர்களை .. அவர்களின் அந்நிய சம்பாஷணைகளை யாரையுமே காணவில்லை .
“சார் ?”
“..”
“யார தேடுறீங்க?அந்த பொண்ணையா ?” என்றதும் கிலுக்கென சிரித்தார் என் அருகில் இருந்தவர் .
நான் கோபமாக பார்த்ததும்,
“ஹி ஹி .. அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப நாளா காணும் சார் ..”
“ஒருவேள ரெண்டு பெரும் கல்யாணம் கில்யானம் பண்ணியிருப்பாங்களோ ?!” என்றார் நக்கீர பெரியவர்!
“என்ன கிரகமோ!”, என்று பொத்தாம் பொதுவாக உச்சு கொட்டிய பின் யாரும் எதுவும் அதை பற்றி பேசாததால் அரை நொடி அமைதிக்கு பின் அனைவரும் அன்னியோன்மாக அரசியல் பேச ஆரம்பித்தனர் . நான் மட்டும் அவளை தேடி கொண்டு தான் இருந்தேன் !
ஆறேழு மாதம் கடந்தது . கிரிஜாவை அவனை நான் கொஞ்ச கொஞ்சமாக மறந்திருந்த சமயம் .. ஒரு நாள் காலை அவசர கதியில் அடித்து பிடித்து முன்னால் இருக்கும் கம்பார்ட்மென்டில் ஏறி ஹப்பாடா என்று மூச்சு வாங்கினேன் . அவ்வளவு கூட்டம் ! கம்பியின் ஓரம் நின்று கொண்டிருந்த நான் எங்கேயாவது இடம் கிடைக்குமா என சுற்றி முற்றி பார்த்தபோது என் நேரெதிர ஒரு பெரிய வட்ட இடைவெளி தென்பட்டது !
“என்ன சார் இது அவ்வளவு இடம் காலியா இருக்கு..?கொஞ்சம் நகருங்க ..!” என்றேன் உரத்தக் குரலில் .
“காலியவா…?!வந்து பாருங்க எசமான்!” என்று ஒரு இளைஞன் நக்கலடிக்க சிரிப்பலையில் மிதந்து போய் அந்த இடைவெளியில் கலந்தேன் . முன் நின்று கொண்டிருந்தவர்களை விலக்கி பார்த்தால் கம்பியின் அந்த ஓரம் ஓர் பச்சிளங்குழந்தை கையில் எதையோ வைத்து விளையாடி கொண்டிருந்தது .அருகே அதன் தாய் அசந்து தூங்கி கொண்டிருந்தார் .
“பாத்தீங்களா சார்.. ஏசி எப்க்ட்’ல தூங்குறா பாருங்க.. எவ்வளவு சத்தம் போட்டும் ..உம்ஹூம்.. நகர மாட்டேங்கிறா.. ஆர்.பி.எப் . வந்தா தான் இருக்கு இவளுக்கு .. !” என்று ஒருவர் சொல்ல எனக்கு இடம் கிடைக்காத கோபத்தில்,
“ஏய்!” என்று அந்த பெண்ணை நோக்கி பெருங்குரலெடுத்தேன்.
சற்றும் அதிர்வடையாமல், தலை நிமிர்த்தி ஒருகணம் என்னை எதிர்நோக்கி பார்த்து, பின் புடவை சரி செய்து கொண்டு, எதுவும் பேசாமல், தன் குழந்தையை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டு எவ்வித சலனமுமின்றி மீண்டும் தூக்கத்திற்கு போனாள், அந்த அம்மா!!
என் கிரிஜாவா அது ? !!
*************
Leave a Reply