Your cart is currently empty!
ஒரு நாள் கடவுள்
தென்றல் நாளிதழில் வெளியானது
“ஹேய் மனோ .. “
கூப்பிட்ட குரலில் இருந்த அன்னோனியம் , பீக் ஹவர் ட்ராபிக்கில் கூட என்னை அறியாமல் திரும்பி பார்க்க செய்தது.பாக்கி!!!!
“பாக்கி….நீயா…எப்டி இருக்க…என்னால நம்பவே முடியல …!”
“ஆமால?!” தெத்துபல் தெரிய அழகாக சிரித்தாள்.
ஒரு சில நொடிகள் பரஸ்பரம் சிரித்து கொண்டே இருந்தோம்.
“என்னடா பிளாஷ்பாக் போறியா?” என்று நக்கலாக கேட்டாள் .
‘சரிசரி இப்படி நீ பேர்லல் ரைடிங் பண்ணா போலீஸ்காரன் என்ன மட்டும் பிடிச்சிடுவான்…இரு பார்க் பண்ணலாம்”
மறுபடியும் தெத்து பல் சிரிப்பு.
அருகில் இருந்த ஒரு ஆவின் கடை நிழலோரம் வண்டியை பார்க் பண்ணி விட்டு அதில் அமர்ந்தோம்.நான் பேசுகிற நிலையில் இல்லை என்றாலும் அவளின் இந்த பரிட்சயமான முக மலர்ச்சி பழைய கொண்டு செல்ல முயன்ற போது அவளே ஆரம்பித்தாள்.
“நிஜமாவே நான் எதிர்ப்பார்க்கல தெரியுமா …!..rearviewல உன் மூஞ்சிய சும்மா தான் பாத்தேன்..இத எங்கயோ பாத்திருக்கொமேன்னு வந்தா, நீ..!!ஆச்சர்யம் விலகாமல் சொன்னாள்.
“வண்டி ஓட்ற சாக்குல இதெல்லாம் பண்றியா நீ …!”
“சீ போ…எப்டி இருக்க…சரி சொல்லு சாப்ட்டியா..”
” … “
“எதுக்கு இப்டி அழுது வடியர..?ஆமா மஹி எப்டி இருக்கா..?”
“எதாவது ஒன்னு கேளு”
சற்று யோசித்து விட்டு,”சாப்டியா ?”என்றாள்.
“இன்னும் இல்ல…”
“அப்போ இரு”,என்று சொல்லி ஸ்கூட்டியில் இருந்து இறங்கி ஆவின் கடைநோக்கி செல்ல ஆரம்பித்தாள்,என் பதிலை எதிர்ப்பார்க்காமல்.
அதான் பாக்கி@பாக்கியலட்சுமி.என் ஸ்நேகிதி.அப்படியே இருக்கிறாள்.
5வருடங்கள் முன்னாள் பாக்கியிடம் சொல்லாமல் மஹி புதுசெருப்பு கூட போடமாட்டாள்.அதனாலயே இவளை பார்த்தால் எனக்கு கோபமாக வரும்.”என் லவ்’கு வில்லியே நீ தான்” என்று 1000 முறை சொல்லி இருப்பேன். தெத்து பல்க்காரி சிரித்தே மழுப்பி விடுவாள்.
என் அம்மாவிற்கு பாக்கி என்றாள் இஷ்டம்.நான் மஹியோட ரகசியாமாய் பேசும்போதெல்லாம் என் அம்மா எட்டி பார்த்து
“பாக்கிதானடா…எனக்கு தெரியும்..கொஞ்சம் கொடேன்… நான் பேசறனே” என்பாள்.என்னமோ எதையோ கண்டு பிடித்த சாதனை கண்ணில் மின்ன .
“சரியா போச்சு…உனக்கு இந்த நினைப்பு வேறையா…இது என்னோட பிரெண்ட் மஹி…பேசறியா?”.
“கண்ட கழுதையோட நான் ஏன் பேசனும்”என்று வேண்டுமென்றே காதுபட முணுமுணுத்து கொண்டு உள்ளே போய்விடுவாள்.
இப்படி பாக்கி என்னை, என்னக்கு பிடித்தவர்கள் எல்லோரையும் பிடித்து வைத்திருந்தாள்.நம் ஊரில் ஸ்நேகிதம் விட்டு போக காரணமா இல்லை..அப்படி தான் பாக்கி என்தினசரி வாழ்க்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி,ஒரு மழை விட்ட நாளில் நான் அசை போடும் ஞாபகங்களில் ஒன்றாக சேர்ந்து விட்டாள்.இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன் .
“ஹெலோ என்ன நீ கொஞ்சம் கேப் கிடைச்சா பிளாஷ்பாக் போய்ட்ற!”
சட்டென்று முன் நின்று கொண்டிருந்தாள்.
“நீ இன்னும் மாறவே இல்ல பாக்கி.”
மெலிதாக சிரித்தாள்.”சரி இப்போ சொல்லு எப்டி இருக்க?”
“இருக்கேன்.”
“மஹி எப்டி இருக்கா ?”
“இருக்கா.”
“கல்யாணம் ஆகிடுச்சா ?”
“யாருக்கு..எனக்கா மஹிக்கா..?,மஹிக்கு ஆகிடுச்சு!எனக்கு இன்னும் ஆகல!!”
பலமாக சிரித்தாள்.
நீங்கள் யாரிடமாவது அதுவும் உங்கள் நெருங்கின தோழியிடம் இப்படி ஒன்றை சொல்லும் போது அவள் சிரித்தால் எப்படி இருக்கும் …
எனக்கு கோவம் சுள்ளென்று வந்தது.முறைத்தேன்.
“இப்போ எதுக்கு முறைக்கிற ..?”
முறைத்து கொண்டே இருந்தேன்
“இப்போ என்ன,”மனோ..என்னாச்சு,,எப்டி நடந்துச்சு.. 2 பேரும் எவ்ளோ சின்சியரா இருந்தீங்க”னு டயலாக் சொல்லனும்மா ..?”
நான் மிகபெரிய இழப்பு என்று இது நாள் வரை மருகி கொண்டிருந்த ஒரு விஷயத்தை மிக சாதரணமாய் பாக்கி அலசுவதை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.வெறித்து பார்த்தேன்.
“சரி…! மஹி இல்ல .. இப்போ என்ன .. அதனால நீ என்ன இன்விசிபிள் ஆகிட்டியா.. இல்லல ? லைப் இஸ் நார்மல் ரிட் …?”
“நீ அத விடு வேற பேசு “
“மாட்டேன் நான் அத தான் பேசுவேன் .. ஒரு சின்ன விஷயம் .. இதுக்கு போய் ..”
“எனக்கு இது சின்ன விஷயம் இல்ல பாக்கி .. !!”
“சரி பெரிய விஷயமாவே இருக்கட்டும் ..நடந்தது எதையும் உன்னால இப்போ மாத்த முடியுமா ?”
“….”
“முடியுமா..?”
“முடியாது !?
“அப்போ ப்ரீயா விடு .. இதெல்லாம் நம்ம கண்ட்ரோல்ல இல்ல ..”
“…”
“பேய் முழி முழிக்காத சாப்டு “என்று அதட்டினாள்
ஏதோ பேச ஆரம்பித்தாள்.
எதேதோ .. எனக்கு எதுவும் காதில் விழவில்லை.
ஆனால் ஆளிலா நிழற்குடையில் அமர்ந்து பிடித்த புத்தகம் படிப்பதை போல் மனதிற்கு இதமாக இருந்தது இந்த நொடி அவள் என் அருகில் இருப்பது.
என்னை அறியமால் கண்ணீர் வந்து விட .. சட்டென்று கைகளால் மறைக்க போன போது அது வரை வேற எங்கயோ பார்த்து கொண்டிருந்தவள் சரியாக என்னை பார்த்து விட்டாள்.
என்னால் முடியவில்லை உடைந்து விட்டே.ன்.
“மனோ லூசு .. அழற பாரு “
“இவ்ளோ நாள் வெயிட் பண்ண .. இன்னும் ஒரு வருஷம் வெயிட் பண்ணுநு கேட்டேன் ..சரின்னு சொலிட்டு போனவ 3 மாசத்துக்கு முன்னாடிவந்து ,ஒரு வருஷத்துல எதும் மாறாது மனோ”னு ஏதேதோ காரணம் சொல்லி , கல்யாண பத்திரிகை வெச்சிட்டு போய்ட்டா ..”
” அந்த ஒரு வருஷத்துல நீ என்ன பண்ண “
“ஒரு மண்ணும் பண்ணல ” என்று சொல்லிக்கொண்டே என் விசிடிங் கார்டு கொடுத்தேன்.
“ஸ்மால் ஸ்கேல் தான் .. நான் ,நம்ம நந்து ல?, எல்லாம் சேந்து ஆரமிச்சோம்..அதுலயும் எதும் பெருசா profit இல்ல ..”
ஒரு வருஷத்துல பெரிய விஷயம் டா .. அதுவும் நம்ம பசங்கநு கேக்கும் போது சந்தோஷமா இருக்கு .. இன்னும் 2 கார்ட் கொடு .. என் வீட்டுக்கார் கிட்ட கொடுக்கறேன் என்று வாங்கினாள்.
” எனக்கு அவல பாக்கணும் போல இருக்கு .. ..இந்த tensionla…”
“அவல பாக்கணும்னு இருந்தா அதோ அந்த தெரு முனைல கூட வெச்சி பாப்ப.ஆனா பாக்கும் போது கொஞ்சம் நீட்டா இருக்கணும்;இல்லைனா அவ எடுத்த முடிவு சரி ஆகிடும் “
“நிறுத்தாத பாக்கி பேசிட்டே இரு ..”
ஒரு மென்மையான புன்னகை., “சரி இப்போ எங்க போய்ட்ருக்க “
“ஒரு காண்ட்ராக் விஷயமா Client ஒருத்தன பாத்துட்டு வரேன் .. அதுவும் அம்பேல் .. “
குரல் தழுதழுத்தது.
“நீ வொர்ரி பண்ணிக்காத “
“இல்ல பாக்கி .,இது முக்கியம் கிளையன்ட் இப்படி கால வாருவான்னு நினைக்கவே இல்ல .! சில சமயம் ரொம்ப தனியா இருக்கேன் என்ன சுத்தி யாருமே இல்லையோன்னு தோணுது “
தலை கவிழ்ந்து கொண்டேன்.
“தனியா இருக்கியா .. யார் சொன்னா .. இதோ பார் உன் மேல ஒரு பூச்சி ‘
என்று என் சட்டை பை மேலே ஒட்டி கொண்டு எங்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த ஒரு பூச்சியினை காட்டினாள் .
“இங்க பாரு மனோ ,இந்த க்ளையண்ட்,மஹி இதெலாம் நீ கிழிச்சு போட்ட தேதி . முடிஞ்சு போச்சுன்னு கசக்கி எரிஞ்சத திருப்பி எதுத்து பாக்கிற அளவுக்கு நீ என்ன வேல வெட்டி இல்லாதவனா ..? ஐ டோன்ட் தின்க் சோ ..” .
மறுபடியும் சட சட என்று பேச ஆரம்பித்தாள் .
இதுவரை என் வீட்டு கண்ணாடி காட்டாத என் பிம்பத்தை ,அவளின் தீர்க்கமான கண்கள் அப்பட்டமாய் காட்டி கொண்டிருந்தது .
எப்படி சொல்வது என்று தெரியவில்லை . சின்ன வயதில் “அம்மா என்ன விடு மா . விளையாட போகணும் .வெளில பாரு ,எல்லாரும் ஜாலியா இருக்காங்க “ என்று முனங்க ் ஆரம்பிக்கும் போது சட்டென்று நடு மண்டையில் வலிக்காமல் ஒரு கொட்டு கொட்டி “முதல்ல ஹோம் வொர்க்க முடி .உன்ன எப்போ விளையாட விடணும்னு எனக்கு தெரியும் “ என்று என் அம்மா சொல்வது போல் இருந்தது .
கடவுள் சல்வாரில் தோன்றுவார் என்று நான் நம்பியது அன்றிலிருந்து தான்!!!
Leave a Reply