மருத்துவர்கள் என்றாலே ரமணா சீன் ஞாபகத்திற்கு வருகிற ரீதியில் ஒரு வகையான மிகைப்படுத்தப்பட்ட எதிர்மறையான பொதுபுத்தி இங்கே நிலவுகிறது. ரியாலிட்டியில் அவர்களின் ஒரு நாள் வுர்க் ஸ்ட்ரெஸை நம்மால் யோசித்துக்கூட பார்க்கமுடியாது. கோவிட் காலக்கட்டத்தை சற்றே நாம் ரீவிசிட் செய்ய வேண்டும்.
கிண்டி சம்பவம் நிகழ்ந்த அன்றே ஸ்டான்லி மருத்துவமனையில் மனநல மருத்துவர் ஒருவர் அவரிடம் சிகிச்சைக்காக வந்த பாதிக்கப்பட்ட இளைஞரால் கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த செய்தி – சிசேரியன் தான் வேண்டும் என்று அடம் பிடித்திருக்கின்றனர் குடும்பத்தினர். ஆனால் நார்மல் டெலிவரி ஆகக்கூடிய சாத்தியங்கள் தாய்க்கு நேர்மறையாக இருக்க டாக்டர் அவருக்கு சிசேரியன் செய்யாமல் நார்மலாகவே டெலிவரி செய்திருக்கிறார். எதிர்பாராத விதமாக வேறேதோ காரணங்களால் குழந்தை தவறிவிட பெற்றோர் மற்றும் உறவினர் போராட்டம் செய்யவும் அவசரமாக டாக்டரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மறுவிசாரணையில் அன்றைய தினம் அதே மருத்துவர் ஒரே நாளில் 12 பிரசவங்களை செய்திருக்கிறார் என்பதையும் முழுமையாக விசாரிக்காமல் அவரை சஸ்பெண்ட் செய்தது தவறு என்றும் மறுபரிசீலனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஏற்கனவே மகப்பேறு மருத்துவர்கள் எண்ணிக்கையில் குறைவு என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
இது போலவே இன்னும் நிரப்பப்படாத உயர் மருத்துவ இதர துறைசார் காலி பணியிடங்கள், அதற்காக நிலுவையில் உள்ள சட்ட சிக்கல்கள், காலம் கடந்தும் நிரந்தரமாக்கப்படாத நர்ஸ் பணியிடங்கள், மகப்பேறு நிதி மோசடி என கடந்த இரண்டு வாரத்தில் வெளியான செய்திகள் துறையில் இருக்கும் பல்வேறு பிரச்சினைகளை பேசாமல் பேசுகின்றன.
இதற்கிடையே தான் துளி கூட நடுக்கமோ தயக்கமோ இன்றி அரசு மருத்துவர் குத்தப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இதற்கான கண்டனங்களை தெரிவிப்பதை விட்டுவிட்டு
‘ஆமா நல்லா குத்துங்க’, ‘வேணும் இவனுங்களுக்கு’ ‘வாழ்த்துக்கள் தம்பி’ போன்ற யூட்யூப் கமென்ட்கள் ஒரு சமூகமாக நமக்குள் இருக்கும் குரூரத்தன்மையை காட்டுகிறதோ என அச்சப்படும் அளவிற்கு இருக்கிறது.
இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் முட்டி மோதி படித்த படிப்பிற்காகவும், கோவிட்டோ எதுவோ வந்தாலும் அசராமல் துணிந்து மக்களுக்கு செய்யும் சேவைக்காகவும் ஸ்டெத்தை மாட்டிக்கொண்டு காலையில் கிடுகிடுவென கிளம்புவது இப்படி கத்திக்குத்து வாங்குவதற்கா என்ன?
கொஞ்சம் மனிதாபிமானம் நமக்கும் இருக்க வேண்டுமல்லவா..
Leave a Reply