தடைகளை மீறி தூங்குதல் என்பது ஒரு கலை.
அதிலும் ஊரே கூடி எழுப்பும் போதும் அசராமல் தூங்குவது ஒரு ஆகப்பெருங்கலை. அவ்வளவு சீக்கிரம் இந்த ஆகப்பெரும் கலையானது எல்லோருக்கும் வாய்க்காது.
இது புரியாத வெளி உலகம் இதனை தூக்கம் என்று கருதி எங்களை பாடாய் படுத்தும் ஆனால் எங்களுக்கு தான் தெரியும் நாங்கள் லயித்திருப்பது ஒரு ஆழ்நிலை தியானத்தில் என்று.
எங்கள் கேங்கிற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது. அதற்காக ரமணா படம் போல எங்கள் கேங்கை சேர்ந்த ஆட்கள் எல்லா டிப்பார்ட்மென்டிலும் ஊடுறுவி இருப்போம். எல்லா ப்ளானிலும் முதல் ஆளாக பங்கேற்போம்.
கோவா ப்ளானோ கோவில் ப்ளானோ எதுவாக இருந்தாலும் சரி , ப்ளான் தொடங்கும் விடிகாலை தான் எங்கள் ஆஸ்தான ஆபரேஷேன் க . க வை (கலையாத கனவு )நாங்கள் தொடங்குவோம்.
இது புரியாத கண் எரிச்சல் பிடித்த மார்னிங் ரைஸர்ஸ் கும்பல் எங்களை ஏசும் ; கண்டபடி வையும். இந்த கும்பலுக்கு தெரியாது இது தான் தான் எங்கள் கோட் வேர்டு என்று. இதற்கு பிறகு தான் எங்கள் ஆப்பரஷேனே அடுத்த கட்டத்திற்கு செல்லும். பச்சையா ப்ளூவா எந்த கலர் வொயிரைப் பிடுங்கினால் Bombஐ டிஆக்டிவேட் செய்யலாம் என்று பரபரப்பாக யோசிக்கும் அத்தேரிக்கா அர்ஜூன் போல ஃபேனை நிப்பாட்டினால் எழுந்திருப்போமா தண்ணீரை தலையில் ஊற்றினால் எழுந்திருப்போமா என்று மார்னிங ரைஸர்ஸ் வெறியர்கள் ஒருபக்கம் படப்படத்துக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் இதெற்கெல்லாம் அஞ்சாமல் இவர்களுக்கு பதில் கொடுத்தப்படியே ஆபரேஷன் கலையாத கனவை நாங்கள் மேற்கொண்டிருப்போம்.
இந்த ஆபரேஷன் இன்று நேற்று உருவானதல்ல. காலம்காலமாக இயற்கையால் தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைனில் ஆர்கானிக்காக வழிவழியாக வருவது. இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்று தானே கேட்கிறீர்கள்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ட்டா சார் ?
முன்னொரு காலத்தில் எங்களின் சூப்பர் சீனியர் கேங்க்ஸ்டா ஒருத்தி இருந்திருக்கிறாள். அவள் ஆனானப்பட்ட ஆண்டாள் கேங்கிலேயே ஊடுருவி இருக்கிறாள். (எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பார்த்தியா..மொமன்ட்)
மார்கழி தொடங்கும் முந்தாநாள் இரவு கோதை பாவை விரதத்திற்காக ஆள் சேர்க்கும் போது நம்மாள் முதல் ஆளாக கைத்தூக்கி
‘நான் எழுந்து எழுப்பி விட்டப்பிறகு தான் சேவலே ட்யூட்டிக்கு ரெடியாகும்’ என்று அடித்து விட ஆண்டாள் புலங்காகிதப்பட்டு நம்மாளை அட்டென்டென்ஸில் முதல் பெயராக சேர்த்திருக்கிறாள்.
மார்கழியும் விடிந்தாயிற்று.
கோதை விரதத்திற்காக பக்காவாக ரெடியாகி விட்டாள். அவள் சொன்னது போல ஒவ்வொருவராக சம்பவ இடத்திற்கு வரவும் தொடங்கிவிட்டார்கள். நம்மாளை இன்னும் காணவில்லை. இவளை நம்பினால் ஆவதிற்கில்லை
பொறுத்தது போதும் என்று மற்ற மார்னிங் ரைஸர்ஸைக்கூட்டிக்கொண்டு வீட்டிற்கே போய்விட்டாள் ஆண்டாள்.
கெஞ்சி பார்கிறாள்
கொஞ்சி பார்க்கிறாள்
கும்பகர்ணி என்கிறாள்
வெங்கலக்கிண்ணமே என்கிறாள்
மலைமாடே என்று சொல்லாமல் சொல்கிறாள்
நம்மாள் அசரவில்லை
அவளுக்கே டையர்டாகி விட்டது
உடனே கூட வந்த மார்னிங் ரைஸர்ஸ்
உன் ஒருத்திக்காக நாங்கள் இத்தனைப்பேர் சில்லென்று பனிக்கொட்ட காத்திருக்கிறோம்
உனக்கு என்னடி உறக்கம் என்கிறார்கள்
நேற்று என்னென்ன கதை அளந்தாய் சேவலை எழுப்புவேன் ஊரைக்கூட்டுவேன் என்றெல்லாம் சொன்னாயே என்கிறார்கள்.
நம்மாள், “ஆமா சொன்னேன் அதுக்கென்ன இப்போ ” என்கிறது..
அப்படி பேசினவள் அறிவாளியாக இருந்தால் எழுந்து வாயேன் என மா.ரை உசுப்பிவிட பார்க்கிறது.
நம்மாளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன,
நீங்களே அறிவாளியா இருந்துக்கோங்க.. நான் ஏமாளியாவே இருந்துக்கறேன் போங்கடி என்று தொடர்ந்து ஆபரேஷன் க.க வில் முழு கவனம் செலுத்துகிறது. மார்னிங் ரைசர்ஸும் விடாமல்,
ஏன்டீமா உன் ஒருத்திக்காக நாங்க இத்தனைப்பேர் வந்து கெஞ்சனுமாம்.. அப்படி என்ன நீ ஸபெஷல்..” என்று புலம்புகிறது. உடனே பதிலுக்கு நம்மாள், “ சும்மா வந்தோம் வந்தோம்ங்கிறீங்களே. எத்தனை பேர் வந்தீங்க? எல்லோரும் முதல்ல வந்துட்டீங்களான்னு நல்லா பாருங்க போங்க!” என்று கூட்டத்தை பத்திவிடுகிறது
ஆபரேஷனில் இது தான் முக்கியமான கட்டம்:
வந்தவர்களையே குழப்பி விடுவது.
ஆண்டாள் கேங்காயிற்றே. அதனால் அவர்களும் அஞ்சாமல், ‘உனக்கு அவ்வளவு இருந்தா எழுந்து வந்து நீயே எண்ணிப்பாரேன்மா!” என்கிறது மார்னிங் ரைஸர்ஸ்.
பட் திஸ் இஸ் எ ப்ளடி் ட்ராப் யூ நோ
அது சரி நம்மாள் எழுந்திருக்குமா எழுந்திருக்காதா?
நீங்கள் நம்மாள் கேங் என்றால் ரிசல்ட் உங்களுக்கே தெரிந்திருக்கும்.
எப்படி கண்டுப்பிடிப்பதா ?
இதை சிரித்துக்கொண்டே படித்தால் நீங்கள் நம்மாள். அடிப்பாவி என்று படித்தால் நீங்கள் சாட்சாத் ஆண்டாள் கேங்.. அட்டாக்
பாசுரம் 15
எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
Leave a Reply