தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

மேய்ப்பன்

மேய்ப்பன்

ப்ரீத்தி வசந்த் 

(படைப்பு இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 

அவர்களால் முதல் பரிசுக்கு தேர்வான சிறுகதை ) 

இன்று சீக்கிரத்திலேயே விழிப்பு  வந்துவிட்டது .

ஜன்னல் வழியாக மீனு வாசல் தூர்த்துவிடும் சத்தம் கேட்டதும் 

‘தினமும் இது போல சீழ்பட்ட  மனதையும் யாராவது வாரி  தூர்த்து விட்டால் எத்தனை தோதாக இருக்கும்?’ என்று தோன்றியது ஜனாவிற்கு. 

தன்னை மறந்து ஒரு கணம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தவனின்  கவனத்தை சட்டென கலைத்தது,செல்போன் அழைப்பு. 

‘சொல்லுங்க சார்…!’ 

மறுமுனையில் தேவராஜன்  ஏதோ சொல்ல, ‘சரி சார் வரேன்!’ என்று செல்போனை அணைத்துவிட்டு அவசர அவசரமாக கிளம்ப ஆரம்பித்தவன்,

“மீனு.. சார் அவசரமா என்னை  கூப்பிடறார்.. என்ன ஆச்சோ!  நான் எப்போ வருவேன்னு தெரியாது.. நீ சாப்பிட்டு படுத்து தூங்கு.. பத்திரமா இருக்கண்ணு!”, என்று சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டு சென்றான். 

‘வெள்ளை டைல்ஸ்’ ‘வெள்ளை சுவர்’  என்றே தெரியாத நிறத்தில் மாறியிருந்த அறை ஒன்றில்  மங்கலான விளக்கு ஒளியின் வெளிச்சத்தில் வேலைப்பார்த்துக்கொண்டிருந்தான் ஜனா. 

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ‘என்ன ஜனார்த்தனா, ஆச்சா..?’ என்று சற்று தள்ளி இருந்த  பக்கத்து அறையிலிருந்து  சத்தமாக குரல் கொடுத்தார் தேவராஜன். 

‘இருங்க சார்.. சும்மா ஆச்சா ஆச்சான்னு கேட்டுக்கிட்டு! இங்க என்ன  கம கமன்னு சமையலா பண்ணிக்கிட்டு இருக்கேன்!’ 

‘சரி சரி! ரொம்ப பிகு பண்ணிக்காத ஜனா.. வெளில ஆளுங்க கூடிட்டாங்கடா .. எல்லாம் நமக்காகத்தான் வெயிட்டிங் ..!’

‘ஹம்ம்கூம்! அவனவனுக்கு அவனவன் பிரச்சனை!!’ என்று முனங்கியபடி அவன் எதிரே இருந்த பிரேதத்தை அனாயாசமாக  புரட்டி கழுவித் துடைத்துக்கொண்டிருந்தான். 

‘சாவுற வரைக்கும் அவசரம் அவசரம்ன்னா செத்ததுக்கு அப்புறமும் அவசரப்படுத்துறானுங்க.. கட்டைல போறவனுங்க..’ என்றார் ஜனாவுக்கு உதவியாக அருகில் நின்றிருந்த ரகுசாமி. ஜனா வேலை கற்றுக்கொண்டது ரகுசாமியிடமிருந்து தான். இப்போது அவருக்கு வயசாகி விட்டதால் அவர் தலைமையில் எல்லாமே ஜனா தான்.  

‘கட்டைல இல்ல தாத்தா இப்போவெல்லாம் கரண்டுல போறானுங்க!’ என்று மெலிதாக சிரித்த ஜனாவை பார்த்து, 

‘சும்மா சொல்லக்கூடாது.. நல்லா தேறிட்டடா மவனே.. நாளைக்கு எனக்கும் நீயே பாத்து பண்ணிடு.. என்ன!’ என்றார். 

‘த்த.. காலைலயே என் வாயில வந்து விழாத தாத்தா.. உனக்கெல்லாம் ஒன்னியும் ஆவாது.. மூஞ்சைப்பாரு.. ந்தா இன்னொரு பக்கெட் தண்ணி  மோண்டு தா!’  என்று   பிரேதத்தை மறுபடியும் தன் பக்கமாக திருப்பினான் ஜனா. 

‘யார்றா இவன்?! ஒன்னியும் ஆவாம இருக்க நான் என்ன சுவத்துல அடிச்ச ஆணியா?! நேரம் வந்தா எல்லாப்பயலும் ஒருநாள் போயி தான் ஆவணும்!’ என்றபடியே பக்கவாட்டில் ஒதுக்குபுறமாக இருந்த சிறிய  அறையிலிருந்து தண்ணீர் கொண்டு வர ஆடி அசைந்து சென்ற அவரது மெலிந்த தேகத்தைப் பார்த்ததும் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக்கொண்டு அவர் பின்னே வலிந்து ஓடினான்,  ஜனா. வாழ்வின் சூட்சுமங்களில் ஒன்றான இறப்பை தினம் விதம் விதமாக பார்த்து பார்த்து அயர்ந்து போன மனது தான் என்றாலும் தன் கண் முன்னே தள்ளாடி செல்லும் ரகுசாமியின் தளர்ந்த முதுமையை பார்த்ததும் தாங்கமாட்டாமல் அழுகை வந்தது. உலகில் உள்ள அனைத்து கெட்ட வார்த்தைகளையும் சொல்லி பிரபஞ்சத்தை பழிக்க வேண்டும் போல இருந்தது.

அழுகையை அடக்கியபடியே “யோவ்..தாத்தா.. இரு இரு.. நீ போற தினுசே சரியில்ல.. எங்கனா விழுந்து தொலைச்சிராத.. வேலைக்கு வராதான்னா கேக்குறியா.. இரு இரு.. நானே தண்ணிய எடுத்துன்னு வரேன் ..போ.. நீ ஓரமா உக்காரு..!” என்று அதட்டினான். 

‘எனக்கென்னடா மவனே.. ?!’

‘உனக்கு ஒண்ணுமில்ல சாமி.. உக்காரு. போ!’ என்று தண்ணீர் எடுக்க அடுத்த அறைக்கு சென்றான். 

வாழ்வின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்ட ஒரு சபிக்கப்பட்ட நடுநிசி நாள் ஒன்றில் கதியற்று நிலைக்குத்தி தண்டவாளத்தில்  நின்றிருந்தவனை முதுகில் தட்டி, ‘சாவணும்ன்னு முடிவு பண்ணிட்ட..சரி..  ஆனா பசியோட ஏன் சாவுற… என் வூட்டுக்கு வந்து ஒரு வாய் சோறு சாப்டுட்டு சாவு! வா!’ என்று வீட்டிற்கு அழைத்து சென்றவர் ரகுசாமி. அன்று முச்சூடும் தாங்கமாட்டாமல் அழுதான் ஜனா. 

‘நல்லா அழுவு.. அழுது தீர்த்துரு.. அப்புறம் இந்த சோத்த சாப்புடு.. வாழணும்ன்னு சொரணை வந்தா நீ பொழச்ச!’, என்று ஒரு தட்டு முழுக்க சோற்றை நிரப்பி அவன் முன் நீட்டினார். வேக வேகமாய் தட்டை  வாங்கி சோற்றை வாயில் திணிக்க ஆரம்பித்தவன் எதற்காகவோ மீண்டும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான்.

‘நான் உன்னாண்ட ஏன் அழுவுற எதுக்கு அழுவுற ..ஒன்னியும் கேட்கமாட்டேன்.. என்னா பையா.. அழுது தீர்த்துட்டு சாப்பிடு.. படுத்து தூங்கு.. காலைல நான் வேலைக்கு கிளம்பி பூடுவேன்..சரியா?! ஆஹ்.. மறந்துட்டேன் பாரு.. ஒண்ணே ஒன்னு.. நான் வேலைக்கு போனதுக்கு அப்புறம்  நீ பாட்டுக்கு எதனா யோசிச்சிக்கினு தனியா இருக்கச்சொல்லோ மனசு மாறி என் வூட்லயே தொங்கிட கிங்கிட போற.. இது என் வூட்டுக்காரிக்கு நான் ஆசையா  கட்டுன வூடு.. வவுத்துல புள்ளைங்க கிள்ளைங்க ஒன்னியும் துளிக்கல.. ஒரு நாள் அவளும் செத்து சாமியாகிட்டா .. நானும் அழுது ஓஞ்சு சாஞ்சு சர்தான் போ.. ஓடுற வரைக்கும் ஓடுது கட்டைன்னு வுட்டுட்டேன்.. அதனால உன் மனசு கினசு மாறுச்சுனா வூட்ட பூட்டிட்டு சாவிய ..தோ.. அந்த மரக்கட்டைமேல வெச்சுட்டு பூடு..  தண்டவாளம் இங்க இருந்து நாலு தெரு தள்ளி..  நாம இப்போ வந்த வழிலேயே தான் கீது .. இல்ல அது பிடிக்கலைன்னா ஒரு ஆத்துப்பாலம்க்கீது .. கொஞ்ச தூரம் நடக்கணும்.. என்ன.. ?!’ என்று படுக்க சென்றார் ரகுசாமி. 

அவர் போனதும் மீண்டும் அழத்தொடங்கினான் ஜனா. சொல்ல எத்தனையோ கதைகள் இருந்தாலும் அமைதியாக நீண்டு கறுத்து மீண்டும் மீண்டும்  எழும் இரவைப்போல, அடிவயிற்றின் ஆழத்திலிருந்து எதையோ சொல்வதற்காக வேகமாக புறப்பட்டு வீறிட்டு அழுகையாக  கிளம்பும் ஆத்மத்தின் ஈனஸ்வரத்தைப்போல அர்த்தமானது வேறெதுவும் இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அன்றிரவு முழுக்க வேண்டிய மட்டும் அழுதவன், காலையில் ரகுசாமி எழுவதற்கு முன்னரே எழுந்து அமர்ந்திருந்தான். அவனைப்  பார்த்ததும் 

‘அட.. பொழைச்சிக்கின போல்து.. !’என்றார் ரகுசாமி. 

‘நீ எங்க போற?’ என்று கேட்டவனை ஏற இறங்க பார்த்தார். 

‘அய்ய.. என்னாண்டையே கேள்வி கேக்குது பாருடா இது..காலைல எங்க போவாங்க..? வேலைக்கு தான் போவாங்க..!’

‘நானும் வரேன்..!’ சட்டமாக சொன்னான்.

சிரித்தார் ரகுசாமி.’டேய் மவனே..!’ அன்று தான் அவர் ஜனாவை மவனே என்று அழைக்க ஆரம்பித்தது. 

 “குழந்தைப்புள்ள.. நீ ! அங்கெல்லாம் நீ வரக்கூடாது.. !’

‘நான் வருவேன்..!’ மீண்டும் சட்டமாக சொன்னான்.  

‘அடிச்சேன்னா பாரு..’ என்று கையை ஓங்கினவர், ‘உன்ன எல்லாம் தண்டவாளத்துலயே வுட்ருக்கணும்.. தள்ளு.. ‘ என்று அவனை ஒதுக்கிவிட்டு புறப்படப்பார்த்தவரின் காலைக்கட்டிக்கொண்டு அழுதான் ஜனா. 

‘முடியாது நானும் வரேன்..என்னையும் கூட்டிக்கினு போ. எனக்கு யாருமில்ல.. எல்லாரும் போய்ட்டாங்க. கண்ணா மூடினா பயமா இருக்கு.. தனியா வுட்டு போவாத.. பயமா இருக்கு.. நீ எங்க போனாலும் நானும் வரேன்.. அப்படி என்ன சுடுகாட்டுக்கா போவப்போற.. அங்கயும் வருவேன்!’

அன்றிலிருந்து இன்றுவரை அவருக்கு எல்லாமே இவனும் இவருக்கு எல்லாமே அவனும் என்றானது.  அதற்கடுத்து வந்த கொஞ்ச காலத்தில் இவர்களுக்கென்றே ஜனா கட்டிக்கொண்ட ஆசை மனைவியாக மீனுவும் இவர்களோடு  வந்து சேர்ந்துக்கொண்டாள். 

‘ஜனா! ஆச்சா..?!‘ தேவராஜனின் குரல் மறுபடி கேட்டது. இம்முறை கொஞ்சம் எரிச்சலாகத்தான் கேட்டது. 

‘இந்தாளு வேற!’ என்று முனங்கியவன், ‘இருங்க சார் ஆகிரும்..’ என்று உரக்கக் கத்தினான். 

‘ஏன் தாத்தா ஒருத்தன் பொறக்கணும்.. ? நொந்து நூலாகி நாயாய் அலைஞ்சி திரிஞ்சி லோல்பட்டு ஒரு நாள் போய் சேரனும்.. அவன் போய் சேர்ந்தத பாத்து இன்னொருத்தன் மாருலயும் வவுத்துலயும் அடிச்சிக்கினு  அழுவனும்… அழுது ஓய்ஞ்சு  மறுபடியும் அவனும் அதே மாதிரியே எதையோ தேடி . அலையனும்… ஓடணும்.. இதெல்லாம் எவன் டிசைன் பண்ணுது..?!’  என்றவாறு புலம்பியவன்  கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு முகத்தை துடைத்து விட்டு, பிரேதத்திடம் திரும்பி, 

‘ஐய்ய .. உன்ன பார்த்து அழுவறேன்னு நினைச்சியா என் தாத்தாவாண்ட பேசிக்கினு இருக்கேன் .. ஆனா உன்ன பாத்தாலும் எனக்கு ஒரு மாறி தான் ஆவுது.. !நீ யாரோ ?எவரோ? எவன் பெத்ததோ? எவன் கண்டான்.. !கட்சீல பாரு இதான் உனக்கு நிலைமை.. !இதெல்லாம் சொன்னா எவனுக்கு புரியுது.. ?

பணம் பணம்ன்னு அலையுறானுங்க! நீயும் அப்படி தான இருந்திருப்ப! உன்ன பாத்தாலே தெரியுதே!’ என்றான். 

‘அடேய் .. செத்ததை பழிக்கக்கூடாதுடா! பாவம் பிடிச்சுக்கும்! எங்க அம்மா சொல்லும்.. வேலைய பாத்து சீக்கிரம் முடிச்சு விடுடா மவனே! ‘ என்றார் தாத்தா. 

‘ம்ம் இதுக்கு மேலயும் பாவம் வந்து பிடிக்குது..  !’ என்று முணுமுணுத்தான். 

‘ஆமா ஏண்டா இதுக்கு இத்தினி பக்கெட் தண்ணீ.. ? என்னெல்லாம் இப்படி படுத்தாதடா மவனே.. எனக்கு இத்தினி ஜில்லப்பு சேராது.. சும்மா ஒரு ஊத்து ஊத்தி அனுப்பிச்சு விட்டுடனும் புரியுதா.. ?’

‘உனக்கு நேரம் சரியில்ல .. சும்மா போயிரு தாத்தா.. !’ என்று கத்தினான் ஜனா. 

‘யோவ் .. அங்க என்னய்யா நைநைன்னு சத்தம்..’  என்று வெளியிலிருந்து கடுக்கடுத்தார்  தேவராஜன்.

‘சின்ன பையன்.. சார் .. நான் கண்டி பேச்சு கொடுக்கலன்னா மிரண்டுடுவான் சார் இதெல்லாம் தொழில் சித்து..!’ என்று கமுக்கமாக ரகுசாமி சொல்ல, அவர் வாயை ‘ஷூ’ என்று சைகையில்  அடைத்தவன், 

‘அது ஒண்ணமில்ல சார்.. தாத்தா சொல்லிக்கொடுத்தாப்புல செய்றேன்.. ‘என்றான் ஜனா. 

‘த்த .. உங்க பாடத்தை எல்லாம் அப்புறம் வெச்சுக்கோங்க.. பத்து நிமிஷத்துக்கு ஒரு தரம் போன போட்டு அந்த இன்ஸ்பெக்டர் சாவடிக்கிறான் இதுல நீ வேற கழுத்தறுத்துக்கிட்டு .. சீக்கிரம் முடிய்யா !’ என்று அதட்டினார் தேவராஜன். 

‘சார் .. இந்தாள வெளிய கூட்டு போங்க சார் !’ என்று தாத்தாவை காண்பித்து கூவினான்  ஜனா 

‘இப்போ உள்ளே வந்தேன்னா பாரு..  டேய் ஜனா உன்னையும் ஒரு ஸ்ட்ரெச்சர்ல ஏத்தி பார்ஸல் பண்ணிடுவேன்!’  என்று பெருங்குரல் எடுத்தார் தேவராஜன். 

‘எங்கே வந்து தான் பாருங்களேன்.. இந்த நாத்தத்துக்குள்ள எப்படி வருவீங்க  ?’,என்ற ஜனாவின்  முகத்தில் மீண்டும் அப்படியொரு சிரிப்பு களை. தாத்தாவும் அடக்கமாட்டாமல் சிரித்தார். 

‘டேய் செத்ததுக்கு முன்னாடி சிரிக்கக்கூடாதுன்னு…’

‘என்ன உங்க அம்மா சொல்லுச்சா ?’, என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்த ஜனாவிற்கு  பிரேதமும் கூடவே  சிரிப்பது போலவே இருந்தது. 

‘என்ன நீயும் சிரிக்கிறியா?! சிரி சிரி இன்னையோட நீ பட்ட கஷ்ட நஷ்டம் சுக துக்கம் எல்லாம் ஓவர்! ஜாலியா போயிட்டு வா..!என்றவன் பட்டென தன் வாயை அடித்துக்கொண்டு,  ‘ஹம்ஹூம் திரும்ப  வராத..  வராத.. இங்க மட்டும் வந்துறாத.. பூச்சி பல்லியாக்  கூட பொறந்துக்கோ! மனுஷனா மட்டும் பொறந்துடாத .. கிளம்பு .. ராஜாவாட்டும் இருக்கப்பாரு.. !’ என்றவன் ஒரு பத்து நொடி பெருமூச்சு விட்டு கண்களை மூடி, ‘சார் முடிஞ்சிடிச்சு சார்!’ என்று கூவினான் 

‘ம்ம் அப்படியே நல்ல நேரம் பாத்து அழைச்சுட்டு வரீங்களா அய்யா?..த்த ரூமுக்குள்ள வந்து போட்றா .. டாக்டர் வந்துட்டான்ப்பாரு!’,  என்றார் தேவராஜன். 

‘தாத்தா.. வரவர வர சார்  சவுண்டு ஏறிக்கினே போவுதே .. !’, என்று கழுவி சுத்தம் செய்து தயார் செய்யப்பட்ட பிரேதத்தை தூக்கமாட்டாமல் தூக்கி  ஸ்ட்ரெச்சரில் ஏற்றி வைத்து தள்ளிக்கொண்டு வெளியே வந்தான் ஜனா. 

‘அவரால அதான் முடியும்.. !அதை செய்யறார்! உன்னால எது முடியுமோ அத நீ செய்டா மவனே.. ! உன் வேலைய அவன் பாக்க முடியாது.. அவன் வேலைய நீ பாக்க முடியாது.. !’

‘ம்.. இந்த வாய் மட்டும் இல்லைன்னு வை, உன்னெல்லாம் நாய் தூக்கின்னு பூடும்!’

‘போடா.. மவனே.. !’

‘சரி, தாத்தா நீ நாளைல இருந்து மீனுவுக்கு துணையா வூட்லயே இரு.. !’

‘ஏன்.. பயமா இருக்கா ?!’

‘அதெல்லாம் இல்ல.. மீனு தனியா தான இருக்கு.. புள்ளத்தாச்சி வேற.. நீ இருந்தா பேச்சு துணையா இருக்கும்ல ?!’

‘டேய் மவனே.. எனக்கு ஒன்னியும் ஆவாது.. அவளைவிட உனக்கு தான் பேச்சு துணை தேவை.. !’

‘ஒன்னியும் ஆவாத இருக்க நீ என்ன சுவத்துல அடிச்ச ஆணியா ?!’

பலமாக சிரித்தார் தாத்தா.

ஒரு வழியாக பரிசோதனைக்காக சுத்தம் செய்து  தயார் செய்யப்பட்ட பிரதேத்தோடு வந்து  சேர்ந்தவனை பார்த்து ,

‘யப்பா.. எவ்ளோ நேரம்டா இதுக்கு?!’  என்றார் தேவராஜன் 

‘சார் அப்போ நாளில இருந்து நீங்களே சுளுவா செஞ்சுடறீங்களா ?!’ அருகில் கமுக்கமாக சிரித்தார் ரகுசாமி. 

‘என்னடா நக்கலா.?!’. 

‘பின்ன என்னா சார்.. கூடவே இருந்துக்கினு நீங்களே இப்படி பேசலாமா.. உள்ள என்ன நாத்தம் நாறுது.. ஜெனெரேட்டர் சரி பண்ண ஆள் கூட்டியாரீங்கன்னு சொன்னீங்களே என்னாச்சு.. நேத்து மட்டும் மூணு தடவ கரண்டு போய் போய் வருது சார்.. !’

‘தோடா சார் .. எனக்கு ஆர்டர் போடறாரு.. . அதெல்லாம் அப்புறம் பாக்கலாம்.. !

‘என்ன சார்… ! ‘ என்று பரிதாபக்குரலில் இழுத்தான் ஜனா. 

‘என்னை என்னடா பண்ண சொல்ற..?! செத்தவன பெத்தவன் இன்ஸ்பெக்டர கடிக்கிறான்.. இன்ஸ்பெக்டர் டாக்டர கடிக்கிறான் டாக்டர் என்ன கடிக்கிறான் நான் உன்ன கடிக்கிறேன்.. இதுக்கே நேரம் போவுது.. தாவு தீருது .. !’

‘ம்ம் .. இதையே சொல்லுங்க எப்போ பார்த்தாலும்.. ! ‘என்று முணுமுணுத்து நகர்ந்தவனைப் பார்த்து, 

‘டேய் ஜனா.. ரொம்ப சலிச்சுக்காதடா..! தோ.. அந்த மேஜை மேல நோட்டுக்கு அடியில கொஞ்சம் காசு இருக்கு பாரு.. எடுத்துக்கிட்டு கிளம்பு .. ஏதாவதுன்னா கூப்பிடுறேன்!’,  என்றார். 

காசை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவனிடம் ‘ஏன்டா மவனே! அந்தாளு கிட்ட ஏன் வீணா வாயை வுட்ற?’, என்று கேட்டார் தாத்தா. 

‘பின்ன என்ன பின்ன.. ?! நிக்குற எனக்கு தானே தெரியும்.. சும்மா பேசிக்கினு..!’ 

‘சரி வுடு.. மீனுவுக்கு எதினா வாங்கினு போலாம் வா!’ 

‘ம்ம். இப்படியே எனக்கும் அவளுக்குன்னே என்னன்னு யோசிச்சிக்கினு இரு.. உனக்குன்னு எப்போ தான் வாங்குவ..?!’ என்று தாத்தாவோடு பேசிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான் ஜனா . 

‘போடா மவனே.. !சின்னஞ்சிறுசுங்க எதுனா  வாங்கி துண்ணுவீங்களா?! அத வுட்டுட்டு என்னான்டா கடிக்கிறான்.. !’ 

‘அதெல்லாம் முடியாது.. இன்னிக்கி நீ எதுனா உனக்கு பிடிச்சது சொல்லு.. நான் வாங்கியாறேன்!’

‘டேய் உன்னோட ரோதனைடா மவனே.. சரி அந்த லால் கடைல போய் காராபூந்தியும் பால்ஸ்வீட் எதுனா வாங்கினு வா. நான் முன்னால நடந்துபோய்க்கின்னு இருக்கேன்.. மீனு வேற தனியா இருக்கும் !’

‘பார்றா.. பல்லு போன வயசுல பால் ஸ்வீட்டா .. ?!”

‘போடா மவனே!’ 

‘ஆமா தாத்தா.. நீ எத்தினி வருஷமா இந்த வேல பாக்குற ?!’

‘யாருக்கு தெரியும்.. ! இதென்ன கலெக்ட்ர் உத்யோகமா கணக்கு வெச்சுக்க.. ?!

‘அது சரி.. !’

‘ஆனா ஒன்னு..!யாராலயும் பண்ண முடியாததை நாம செய்யறோமேன்னு ஒரு திருப்தி.. ரோட்டுல தேமேன்னு  அடிப்பட்டு கிடக்கிற அணில் கணக்கா மனுஷங்கள கொத்து கொத்தா கிடத்தி பாத்துருக்கேன்.. குழந்தைங்க.. வயசு புள்ளைங்க.. வயசானவங்க.. நல்லவன் கெட்டவன்.. ஏழை பணக்காரன்.. பேர் தெரிஞ்சவன் தெரியாதவன்.. துள்ள துடிக்க முண்டமும் பிண்டமுமா  எல்லாரையும் பாத்துருக்கேன்..  எனக்கு எல்லாரும் ஒன்னு…கடசீல எல்லாரும் ஒன்னு தான்டா மவனே.. யாரோ எவனோ எல்லாருக்கும் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சு அனுப்பறோம் பாரு.. அதுல ஒரு திருப்தி..ஆனா எனக்கு ஒரே ஒரு வருத்தமடா மவனே.. !;

‘என்ன தாத்தா ?!’

‘என் அப்பனும்  இதே பொழப்பு பாத்தவங்க தான்.. சின்ன வயசுல இருந்தே இந்த வாடையும் விவரமும் பழக்கப்பட்டது தான்.. ஆனா பாவம் நீ யாரோ எவரோ!  யார் வீட்டு கண்ணுக்குட்டியோ ?அன்னைக்கு மட்டும் உன்ன நான் தெருவுல இருந்து கூப்பிட்டு வரலைனா நீ இந்த வேலைக்கு வந்திருக்க மாட்டா.. வேற எங்கனா எதுவாவோ பொழச்சிக்கினு இருந்துருப்ப.. உன்ன இதுல இழுத்து வுட்டுட்டுட்டோமோன்னு தான் எனக்கு வருத்தமாயிருக்கு!’ 

‘வயசாயிருச்சுன்னு பாக்க மாட்டேன்.. வாயிலேயே போட்ருவேன் பாத்துக்க..! யோவ் தாத்தா.. நீ மட்டும் அன்னைக்கு என்னை உன் வீட்டுக்கு கூட்டியாரலனா  எங்கனா தலையை வெச்சு செத்து தொலைஞ்சிருப்பேன்.. லூசு மாதிரி எதையாவது உளறிக்கிட்டு இருக்காத.. ‘

‘அத வுடு.. உனக்கு எதுவாவது ஆவணும்ன்னு ஆசை இருக்காடா மவனே.. ?!’

‘ஏன்.. கேக்குற..?! சொன்னா  பால்வாடி இஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்க போறியா.. ?!’

‘சும்மா சொல்லுடா.. !’ 

‘சாவுறதுக்கு முன்னாடி வரைக்கும் என் அம்மா சொல்லிக்கினே இருக்கும்.. அதுக்கு நான் டாக்டர் ஆவணும்ன்னு தான் ஆசை.. !’

‘அய்ய!’ என்று முகம் சுளித்தார் தாத்தா. 

‘சீ சீ.. நம்ம தினமும் பாக்குற  மாதிரி அறுத்துப்பாக்குற டாக்டர் இல்ல.. இந்த டீவிலலாம் வருவாங்களே நல்ல டாக்டரு.. ‘ஐயா குலசாமி எப்படியாவது காப்பாத்திடுங்கயா’ன்னு எல்லாரும் கையெடுத்து கும்பிடும்போது.. ‘எல்லாம் ஆண்டவன் செயல்!’ அப்படின்னு கண்ணாடியை ஸ்டைலா கழட்டிகிட்டே சொல்லிட்டு ஒரு வெள்ளை ஸ்க்ரீன் துணி போட்ட ரூமுக்குள்ள போவாரே .. அந்த மாதிரி வெள்ளக்கோட்டு..  கருப்பு பிரேம் கண்ணாடி போட்ட ..டாக்டரு.. !ஆனா என் அப்பன் இருக்கான்பாரு.. அவன் சொல்லுவான்.. நான் ஆடு மாடு மேய்க்க தான் லாய்க்குன்னு .. ஒரு விதத்துல அவன் சொன்னது தான் நடந்துருக்கு.. !’

‘அதெப்படிடா மவனே..?’

‘பின்ன..எங்கெங்கேயோ அலைஞ்சு திரிஞ்சு காணா பொணமாகாம  இந்த செத்துப்போன மனுஷ ஆடுங்கள சுத்தப்படுத்தி போய் சேர வேண்டிய இடத்துக்கு சுளுவோ அதுங்களுக்கே தெரியாம பாத்து பாதுகாத்து  பதனமா  வழியனுப்பி வைக்கறேனே!  நான் மேய்க்கிறவன் தானே.. !’ என்றான் ஜனா. 

பலமாக சிரித்தார் தாத்தா. 

‘யோவ்.. என்னய்யா இப்படி சிரிக்கற..?! பொட்டுன்னு போயிரப்போற பயமா இருக்குய்யா.. !’

இன்னும் பலமாக சிரித்தார் தாத்தா. 

‘உன்னோட ஒரே எழவுயா.. இந்தா.. கடை வந்திருச்சு பாரு.. நான் கடைல வாங்கின்னு வரேன்.. நீ வீட்டுக்கு பாத்துப்போ!’  என்றவன் லால்கடைப்பக்கம் நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தின்பண்டங்களோடு வீடு வந்து சேர்ந்தவன், அவற்றை வீட்டுப்படி மேல் வைத்துவிட்டு 

‘மீனு மீனு!’  என்று குரல்  கொடுத்தவாறே அசதியாக வீட்டுத்திண்ணையில் வந்து அமர்ந்தான். 

அவன் குரலுக்கு பதிலேதும் வரவில்லை

‘தூங்கிட்டியா.. மீனு?! தோ நிலப்படிக்கிட்டே தாத்தாவுக்கும் உனக்கும் பிடிச்சதை வாங்கியாந்து வெச்சுருக்கேன் .. பாரு.. எடுத்து சாப்பிடு.. ‘

‘என்ன பதிலே பேசமாட்டேங்குது.. லட்சுமி அக்கா..  அக்கா! !’ என்று பக்கத்துக்கூரையை நோக்கி கூப்பிட அந்த திசையிலிருந்து எதிர்பட்டார் லட்சுமி  அக்கா. 

அவரிடம், ‘மீனு எங்கக்கா? குரல் குடுத்தா பதில் பேசவே மாட்டேங்குது.. சரி.. தூங்குது போல.. நீங்க நிலப்படி மேல இருக்கிற பொட்டலத்தை எடுத்து அதுக்கும் தாத்தாவுக்கும் கொடுங்க.. !’ நான் கொஞ்ச நேரம் இப்படியே படுத்த்துக்கறேன்.. !’ என்று திண்ணையில் சாய்ந்தான். 

நிலப்படி மேல் இருந்த பொட்டலங்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்த லக்ஷ்மி அக்கா விசும்பியபடியே தெற்கு மூலையில் தரையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு படங்களுக்கு மத்தியில் பொட்டலங்களை பிரித்து வைத்தார்.

ஒரு படத்தில் நிறைமாத சீமந்த பெண்ணாக மீனுவும் இன்னொரு படத்தில் வெள்ளை மீசை முறுக்கேறியபடி ரகுசாமி தாத்தாவும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

‘பொண்டாட்டியும் தாத்தாவும் போனது கூட புரிபடாம அலைஞ்சு ஓடா தேயுதே.. இந்த புள்ள..!”  என்று 

தனக்குள் விசும்பிக்கொண்டே வெளியே வந்த லட்சுமி  அக்கா, ‘‘பொட்டலத்தை மீனுவாண்ட வெச்சுட்டேன் ஜனா! இன்னைக்கு நயிட்டுக்கு உனக்கு துணையா நம்ம மதி வந்து படுத்துப்பான் ஜனா.. என்ன..! வாசல்ல படுத்துக்காதய்யா.. பனிகாத்து உடம்புக்கு ஆவாது.. சரியா..?‘ எனச் சொல்லி சென்றார்.

அன்றிரவு  குறட்டை விட்டு தூங்கினவனுக்கு மறுநாள் காலை சீக்கிரத்திலேயே விழிப்பு  வந்துவிட்டது . ஜன்னல் வழியாக மீனு வாசல் 

தூர்த்துவிடும் சத்தம் கேட்டதும்  தினமும் இது போல சீழ்பட்ட  மனதையும் யாராவது வாரி  தூர்த்து விட்டால் எத்தனை தோதாக இருக்கும்  ? என்று தோன்றியது.  ஒரு கணம் நீண்ட யோசனையில் ஆழ்ந்தவன், பிறகு சுதாரித்து 

வழக்கம் போல வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்க,  செல்போனில் தேவராஜன் அழைத்தார். 

‘ச்சோ ச்சோ’ என்று உச்சுக்கொட்டி போனை பேசி அணைத்தவன், கிளம்பி வாசலுக்கு  வெளியே வந்தான். 

‘மீனு மீனு .. ஏதோ கல்யாண கோஷ்டியாம் பாவம் 16 பேரு.. நான் போய் முடிச்சிக்கினு வரேன்.. நீ படுத்து தூங்கு.. என்ன.. ?! நான் வர லேட்டாகும் .. இந்த தாத்தா எங்க.. போனாரு..வயசான காலத்துல இவரு வேற எங்கயாவது போயிடறாரு.. !

தாத்தா தாத்தா என்று வழிநெடுக கண்களால் தேடிக்கொண்டே அரசு மருத்துவமனை பிணவறை நோக்கி சென்ற மேய்ப்பனுக்கு அன்றைய பொழுது தூர்த்து முடித்து புதிதாகத்தான் புலர்ந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *