தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

மஞ்சள்  மாத்திரை 

சிறுகதை -1

                                           ப்ரீத்தி வசந்த்

‘என்னங்க?’

‘ஹ்ம்ம்’

‘என்ன்ன்னன்னங்க??!’

‘ஹ்ம்ம் வந்துட்ட்டேன்!’ 

இப்போதும் செல்லவில்லை என்றால் அடுத்து நிர்மலா கூப்பிடும் தொனியில் பக்கத்து வீட்டு  ‘என்னங்க’ இங்கே வந்து விடுவார் .அதனால் டிவி ரிமோட்டோடு மெதுவாக எழுந்து அவள்  அருகில் சென்றேன்.

‘சண்டே ஆனா டிவி தானா? நேத்திக்கே சொன்னேன்ல?! இப்போ பாருங்க அபிக்கு காய்ச்சல் ஜாஸ்தி ஆகிடுச்சு’ என்று அவள் சொன்ன போது அவளின் களைத்து போயிருந்த முகத்தில் வருத்தம் சேர்ந்து இன்னும் அவளைக்  களைப்பாக்கி கொண்டிருந்தது.

‘மழைல எப்பவும் ஆட்டம் போட்டா இப்படித்தான்!’

என்று அபி அறைக்குள் நுழைந்தேன். ஜன்னல் சாரல், அவன் படுக்கையை லேசாக நனைத்துக் கொண்டிருந்தது கூடத்  தெரியாமல் போர்வைக்குள் சுருண்டு கிடந்தான், பதிமூன்று வயதான மகன், அபிஷேக். சுருக்கமாக அபி. அதனால் நாங்களும் மற்றவர்களுக்கு சுருக்கமாக “அபி அம்மா-அபி அப்பா” ஆனோம். 

‘அபி..எழுந்திரு..இங்க பாரு சாரல் வேற அடிக்குது’ . அபி இன்னும் போர்வைக்குள் தான் இருந்தான் .  அவன் மேல் காய் வைத்துப் பார்த்ததில் உஷ்ணம் சற்று ஜாஸ்தியாக தான் பட்டது.

 ‘நிம்மி! நேத்து பாராசிட்டமால் கொடுத்திட்ட’ல ?’ என்றேன் மனைவியை நோக்கி. 

‘கொடுத்தேன் கொடுத்தேன் ஆனா  ஒன்னும் கேக்கறாப்புல இல்ல..  மழைக்காலம் வேற… ஒரு எட்டு போய் நம்ம விஜயகுமார் கிட்ட காமிச்சிட்டு வந்திடுங்க!’ என்று அபியின் அறை ஜன்னலை  சாத்திக்கொண்டே கூறினாள் நிர்மலா.

‘சரி.. இவன எழுப்பி விடு. நான் சட்டைய போட்டுட்டு வரேன்!’ என்று விஜயகுமார் க்ளினிக்கிற்கு  கிளம்ப ஆரம்பித்தேன். 

விஜயகுமார் என் பால்ய கால சிநேகிதன். நாங்கள் வசிக்கும் இடத்திலேயே பேர்  பெற்ற  கைராசி டாக்டர். எங்களுக்கு ஆஸ்தான குடும்ப நண்பரும் கூட. இந்த மதிய வேளையில் அவனிடம் சென்றால், கூட்டமில்லாமல் நிதானமாக காண்பித்துவிட்டு வரலாம்.  எனவே அவசரமாக கிளம்பினேன். 

ஐந்து நிமிடம் கழித்து அபியை பின்னால் அமர்த்தி விட்டு பைக்கில் விஜயகுமார் வீட்டுக்கு புறப்பட்டேன்.மழை விட்ட வெறுமையில் வானம் அமைதியாக இருந்தது.அப்படியே தூங்கி விட போகிறானோ என்று அபியிடம் பேச்சுக்  கொடுத்துக்  கொண்டே வந்தேன் .

‘அபி என்னடா நாளைக்கு ஸ்கூல்க்கு மட்டம் அடிக்க திட்டமா?’ என்று நான் சொன்னதும்,

 ‘நீ வேறப்பா.. வீட்ல இருந்து நான்  என்ன பண்றது? நீயும் ஆபிஸ போய்டுவ! அம்மாவும் என்னை  டிவி, கேம்ஸ்’ன்னு  எதுவும்  போட விடமாட்டாங்க. அம்மா ஒரே போர்!!’ என்று சலிப்பாக சொன்னான். 

மெலிதாக மனதிற்குள் சிரித்தேன்.எனக்கு அந்த அளவுக்கு ஒன்றும் நிர்மலா போர் இல்லை . கொஞ்சம் கண்டிப்பு. அதுவும் அவளின் பால் பாயசத்திற்க்கும் பளிச் பேச்சுக்கு முன் தோற்றுவிடும்.

‘அப்பா எனக்கு புதுசா ஷட்டில் பேட் கேட்டேனே…?எப்போ  வாங்கி தருவ…?’

தற்காலிகமாக நிர்மலா பற்றிய சிந்தனையில் இருந்து என்னை பிரித்தது, அபியின் சளிப்பிடித்த  கொண கொண   குரல் .

‘இப்போதைக்கு விஜயகுமார் அங்கிள் எழுதி தர பெரிய ட்யூப் மாத்திரை வாங்கி தரேன்!

பேட் எல்லாம் அப்புறம் பாக்கலாம்’ என்று நான்  பதில் சொல்லவும் 

‘கஷ்டம்பா உன்னோட..!’ என்று சலித்துக் கொண்டான். அப்படியே நிர்மலா வாசனை!

அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது.விஜயகுமார் வெளியூர் கிளம்புவதாக 2 நாள் முன் பார்க்கில் வைத்து என்னைப் பார்த்த போது சொன்னான் . ‘அடடே! மறந்தே போய்விட்டேனே’ என்று நினைத்து முடிப்பதற்குள்  பைக்  அவன் க்ளினிக்  முன் வந்துவிட்டு இருந்தது. க்ளினிக்  பூட்டு  போட்டு ‘டாக்டர் அவுட்’ பலகை  பெரிதாக தெரிந்தது.

அப்படியே யு டர்ன் போட்டு இன்னொரு  டாக்டர் க்ளினிக்கிற்கு  வண்டியை முறுக்கினேன். இவர் பெயர் தமிழரசு. விஜயகுமார்க்கு அடுத்து, ஏரியாவில் இவரிடம்  தான் வருவார்கள்.எனக்கு இவரிடம் வருவது இது தான் முதல் முறை.வாசல் வெளியில் செருப்பு கொட்டிக் கிடந்தது. தலை எண்ணியதில் நாங்கள் 15வது. உட்கார இடம் இல்லையே என்று யோசித்த போது 2 ‘பெரிய மனிதர்கள்’, ‘நேரமாச்சு’ என்று முனுமுனுத்துக் கொண்டே வெளியே போனார்கள்.சட்டென்று அபியை அமர்த்தி விட்டு நானும் அமர்ந்தேன். மனதில் ஏதோ சாதித்த திருப்தி. அபிக்கு காய்ச்சல் ஜாஸ்தி ஆகிக்கொண்டே இருந்தது. அப்படியே என் மீது சாய்ந்து படுத்து கொண்டான். நானும் அவனை அணைத்துப்  பிடித்தவாறு க்ளினிக்கில் புத்தகம் ஏதும்  இருக்கிறதா என்று மேய்ந்தேன். 2-3 மெடிக்கல் மேகசின் இருந்தன.அப்புறம் நான் ஏற்கனவே வீட்டில் புரட்டிய தந்தியின் பாதி. க்ளினிக்கை நோட்டம் விட்டதில்  சுவரில் காலம் காலமாக நாம் பார்த்து வரும் ராபீஸ் நாய்  , எச்சில் தெறிக்க தும்மும் முகம், அழகு பல் வரிசை தெரிய சிரிக்கும் மேற்கத்திய பெண் அப்புறம் டைஜெஸ்டிவ்  சிஸ்டம் படங்கள். இதற்கு நடுவே  ஐந்து நாள் முன்னாடி மாலையிட்ட  விநாயகர் எங்கள் எல்லோரையும் பார்த்துக்  கொண்டிருந்தார். சுற்றி முற்றி ஒரே இருமலும் புலம்பலுமாக இருந்தது .இதற்குள் எப்படியோ எங்கள் முறை வந்துவிட்டது .

ரெகுலர் செக் அப்-பிற்கு பின் அபியை  பரிசோதித்து விட்டு டாக்டர் தொடர்ந்தார். 

‘ சீசனல் தான்! ஆல்மோஸ்ட் எல்லாரும் இதே கம்பளைண்ட்டோட தான் வராங்க..!’, என்றார் டாக்டர் தமிழரசு .

‘ஏதும்  ஸ்ப்ரெட் பீவர் இல்லையே’?

‘நோ நோ! அதெலாம் இல்ல சார்! ஆண்டிபயாடிக் கொடுத்தா சரி ஆகிடும். பெரிய பையன் தானே மாத்திரையாவே கொடுத்துட்றேன்.  நான் ப்ரிஸ்க்ரைப் பண்றத கொடுங்க, போதும் ‘ 

‘வீட்ல பாராசிட்டமால் கொடுத்தோம். ஒன்னும் கேக்கறாப்ல இல்ல! இப்போ..’,என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ,  

‘பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல, இருந்தா நானே சொல்லிருப்பேனே! நான்  தர மெடிசின் கொடுங்க! போதும்! இட் வில் பி ஆல்ரைட் இன் நோ டைம் , ஆனா மருந்து டைம்க்கு போலோ பண்ணனும்-தொடர்ந்து பத்து  நாள்!!’ என்றார் சிடுசிடுத்துக்கொண்டே.

மறுமொழி ஏதும் பேசாமல்,  ‘தேங்க்யு டாக்டர்!’ என்று மட்டும் சொல்லி  அவர் சொன்ன ,எந்த மாத்திரை எப்போது , எந்த வேளை  என்பதை மட்டும்  கேட்டு க் கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம் .

பரவாயில்லை! நார்மல் ஃபீஸ் தான் கேட்டார். பையனைக்  கூட்டிக்  கொண்டு ப்ரிஸ்க்ரிப்ஷனில் இருந்த மெடிக்கல் கடைக்கு விரைந்தேன். மறுபடியும் ஒரு முறை கடைக்கார பையனிடம் எந்த மாத்திரை எப்போது என்று கேட்டு அடுத்த இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தோம். எங்களையே எதிர்ப்பாத்திருந்த நிர்மலா சற்று பதட்டமாகவே இருந்தாள்.

‘என்னங்க.. இவ்ளோ நேரம் ?’

‘நம்ம விஜயகுமார் ஊர்ல இல்ல நிம்மி!  அதான் தமிழரசு டாக்டர் இருக்கார்’ல , அவர்கிட்ட காமிச்சிட்டு வரேன்.. பெரிய க்யு வேற..!’

‘உங்களுக்கு போகிறதுக்கு வேற டாக்டரே கிடைக்கலையா?  அந்த ஆளு சரியான முசுடாச்சே?’

‘ஏன்டீ நான் என்ன உன் பொண்ணுக்கு மாப்பிள்ளையா பாக்க போனேன்?காய்ச்சல் வேற அதிகமாகிட்டு இருக்குல்ல!எல்லாம் நல்ல டாக்டர் தான், சும்மா குறை சொல்லிக்கிட்டு..!’

‘என்ன சொன்னார் உங்க நல்ல டாக்டர் ?

‘சீசனல் பீவர் தானாம்! ஆன்டிபயாடிக் டேபிலேட் பத்து நாளைக்கு ஃபாலோ பண்ணா போதும்னார். பிரட் இட்லி கஞ்சி தான் கொடுக்கணுமாம். வெண்ணி கொண்டு வா.. இப்போ ஒரு டோஸ்  கொடுத்துடனும்’

‘அப்பாடா நான் கூட மறுபடியும் கொரோனவொன்னு பயந்து போயிட்டேன்.  சளி இருமல் வந்தாலே இப்பெல்லாம் என்னவோ மாதிரி  இருக்கு. சரி மாத்திரை எடுத்து வைங்க, கெட்டில்ல சுடு தண்ணி கொண்டு வரேன் ‘ என்று உள்ளே போனாள்  நிம்மி .

‘அபி இங்க  வந்து அப்பா பக்கத்துல உக்காரு..’ என்றதும் சுருண்டு வந்து என்னை அனைத்து கொண்டான் . காய்ச்சல் அதிகமாகி இருந்தது.

நிர்மலா வெண்ணீரோடு வந்தாள்.என்னை கட்டி கொண்டிருந்த அபியை தூக்கி எழுப்பி பிரட்  ஸ்லைஸ் ஊட்டி விட ஆரம்பித்தாள். நானும் அதற்குள் ஒரு பக்கம் மாத்திரைகளையும் இன்னொரு பக்கம் ப்ரிஸ்க்ரிப்ஷனையும் டேபிளில் வைத்து  எல்லா மாத்திரையும் சரி பார்த்து கொண்டு எது எப்பொழுது என்று ஒரு முறை சொல்லி பார்த்து… சொல்லி பார்த்து… சொல்லி…பார்த்து… 

‘ஐயையோ!’ 

சட்டென்று என் செரிபெளத்தில் இருந்து மாத்திரை விளக்கங்கள் எல்லாம் மறைந்து விட்டது போலிருந்தது!!

யோசிக்க யோசிக்க வெறுமை…வெறுமை..!! முற்றிலும் வெறுமை.!!

‘என்னங்க ..?’

‘ஹ்ம்ம் ..?’

‘என்ன ப்ரிஸ்க்ரிப்ஷன தடவிட்டு இருக்கீங்க? மாத்திர கொடுங்க..!’ என்று கத்தினாள் நிம்மி. 

‘கொஞ்சம் இரும்மா..’ என்று மறுபடியும் மண்டைக்குள் ஞாபகப்படுத்தி  பார்த்தால்.. உம்ஹூம்…. சுத்தமாக நினைவில் இல்லை! பெருங்குழப்பம்!  பெரும் வெறுமை! 

அடக்கடவுளே !!

நிர்மலா என்னை என்னவோ போல பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘நிம்மி … மறந்துட்டேன் டீ!.’

   ‘என்னத்த..?’

‘எது எப்போ கொடுக்கணும்னு!’

‘கஷ்டம்!!!!’ என்று தலையில் அடித்துக் கொண்டே என்னிடம் இருந்து ப்ரிஸ்க்ரிப்ஷனை பிடுங்கினாள்.

‘டாக்டர் என்ன சொன்னார்..?’

‘2 அரை மாத்திரை காலைல  ஒன்னு நைட் ஒன்னு .. அப்புறம் 3 வேளைக்கும் ஒரு ஒரு மாத்திரை 4 நாளைக்கு’

‘அரை மாத்திரை எத்தன நாளைக்கு .?’

‘அதுவும் 4 நாளைக்கு.கடைக்காரன்  எல்லாத்தையும் நாலு நாலு ஸ்ட்ராப்பா கொடுத்ருக்கான்!கலர் வேற ஒரே மாதிரி இருக்கா.,அதனால பாத்தததும் குழம்பிடுச்சு…!’

‘ப்ச்.. சின்ன குழந்தை  பையன் மாதிரி ப்ளேம் பண்ணிக்கிட்டு.. நல்லா ஞாபகப் படுத்தி பாருங்க … சீக்கிரம்!’ என்று உறுமினாள் 

எனக்கே கொஞ்சம் பரபரவென்று ஆகிவிட்டது!எவ்வளவோ ஞாபகப்படுத்த முயன்றும் அப்பட்டமாக நினைவுக்கு வரவில்லை. 

ஜாஸ்தி யோசித்து பார்த்ததில்  போன வெள்ளிக்கிழமை ஆபீசில் எத்னிக் வியர் டேயின் போது   என் பக்கத்து க்யுபிக்கள் பவித்ராவின் மஞ்சள்ப்பூப் போட்ட சேலை சட்டென நினைவில் சாஷ்டாங்கமாக  உட்கார்ந்து விட்டது. சின்ன சின்ன வட்டமாய் அழகிய மஞ்சள் பூக்கள், சுற்றி போல்கா டாட் வட்டங்கள் கொஞ்சம்  பூ.. கொஞ்சம்  போல்கா டாட்.. பிறகு கொஞ்சம் பவி! 

‘பவி!’ என்றேன் என்னை அறியாமல். 

‘என்னது யாரு பவி ?” என்று உறுமினாள் நிர்மலா. 

‘பவி இல்லம்மா பாவி.. அடப்பாவி மறந்துட்டேனேன்னு சொன்னேன்.. ‘ 

‘ஹம்ம்கூம் இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..!’ என்று கடுகடுத்தாள்!

எனக்கு பகீர் என்றது!

‘இல்லம்மா .. அது ..’ என்று இழுப்பதற்குள் 

‘போய் அந்த கடைலயே கேட்டுட்டு வாங்க.. சீக்கிரம் ..’ என்று நிர்மலா என்னை கடித்துக் குதறினாள்.

‘வேணும்னா ப்டாக்டர்க்கு போன் பண்ணி கேக்கவா…?’

 நிர்மலா பதிலை எதிர்பாராமல் உடனே போனை போட்டேன்.. அவர் தான் எடுத்தார்..

‘ஹெலோ டாக்டர் தமிழரசு ..’?

‘சொல்லுங்க ..’

‘சார் என் பேர் சந்திரசேகர் .. ஒரு முக்கால்மணி நேரம் முன்னாடி நான் உங்க கிளினிக் வந்தேன் . என் பையன் 13 வயசு,அபிஷேக் .. காய்ச்சல்ன்னு’

‘ஐ  டோன்ட் ரிமெம்பர் .. என்ன சார் வேணும் ..?’ என்று சிடு சிடுத்தார்!

‘இல்ல.. மருந்துல எது எப்போ கொடுக்கணும்னு தெரியல..அதான் உங்ககிட்ட  ‘

‘படிச்சவர் தான நீங்க.?!. சொல்லும் போது என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க? இப்போ கேட்டா..? ஹவ் இர்ரெஸ்பான்சிப்ல் !’

‘…..’

‘ஃபார்மசில போய்  கேளுங்க.. !’ என்று பட்டென்று போனை வைத்தார்.

‘சொன்னாரா…!?’ நிர்மலா அலறினாள் .

‘திட்டிட்டு படக்குன்னு வெச்சிட்டார் நிம்மி  !’ என்றேன் பாவமாக.

‘அந்தாளு தான் முசுடுனு அப்போவே சொன்னேனே! கடைக்கு நீங்க  போறீங்களா ? இல்ல நான் போகவா…?’ என்று நிம்மி எத்தனிக்க, அபி என்னைப் பார்த்து அந்த காய்ச்சலிலும் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தான் .

உடனே சம்பவ இடத்திலிருந்து தப்பித்து அவசர அவசரமாக அனைத்தையும் எடுத்து கொண்டு பார்மசிக்கு விரைந்து கடைபையனிடம் விவரம் கேட்க என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் ப்ரெஷகிரிப்ஷனை விளக்கினான். இந்த முறை தெளிவாக  பேப்பரில் தெளிவாக குறித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் , அபிக்கு மாத்திரை கொடுத்தும்  முடிப்பதற்குள் ஒரு வழி  ஆகிவிட்டது!.

  ‘அப்பாடா !!!!’ என்று நான் பெரு மூச்சு விட்டாலும், டீபாய் முன்னிருந்த 

ப்ரிஸ்க்ரிப்ஷனையே வெறித்து பார்த்துகொண்டிருந்தது கண்கள் .

‘நிம்மி இனிமே அந்த டாக்டர் கிட்ட போகவே கூடாது! ஒரு அவசரம்ன்னா   சொல்றாரா  பாத்தியா? அப்படி  கத்தறார்  போன்ல!’

‘அவர சொல்லி குத்தமில்ல..உங்களுக்கு எங்க போச்சு..புத்தி ? ‘ என்றாள். 

சட்டென்று ப்ரிஸ்க்ரிப்ஷன் பூராவும் வளைந்து நெளிந்த போல்கா டாட் போட்ட  மஞ்சள்பூக்கள்  பூத்து நின்றன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *