கடந்த சில வாரங்களாக நானும் வசந்தும் ஒரு வித ஜென் நிலையை அடைந்து வருகிறோம். பிள்ளையாண்டான் வைத்து செய்கிறான். இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் ‘தா தா’ மொழி தான். தண்ணீர் வேண்டும் என்றாலும் தா.. தேங்க்யூ என்றாலும் தா.. அதை எடுத்து தாங்க என்றாலும் தா.. தாத்தா என்றாலும் தா தான்
தமிழில் இதை சிலேடை என்பார்க்ள். (அர்த்தத்தோடு வரும் பட்சத்தில்)
ஒரு சொல்லோ ஒரு தொடரோ திரும்ப திரும்ப வெவ்வேறு அர்த்தங்களில் வந்து பொருள் தந்தால் அது சிலேடை.
சிலேடைக்கு ஒரு தனி அழகுண்டு. சிலேடையில் பாட்டு பாடலாம். விடுகதை போடலாம். கவிதை சொல்லலாம். ஜோக் அடிக்கலாம். ஏன் திட்டக்கூட செய்யலாம். ஜாலியாக எல்லாவற்றுக்கும் பொருந்தி வரும்.
உதாரணத்திற்கு சமீபமாக இழு இழுவென ரஹ்மான் நம்மை சுண்டியிழுத்த பாடலை எடுத்துக்கொள்வோம். பாடல் வரிகளை விவேக் எழுதியிருக்கிறார். சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர்களில் ஒருவர். இப்பாடலிலும் அவரது இளந்தமிழ் காதல் மிளிர்கின்றது.
“இந்த கருவிழி காரண பெயரோ
அந்த கருவினில் உயிர் பெற்று வரவோ
இது காலத்தின் அடர்வோ”
என்கிறார் கவிஞர்.
கருப்பாக இருப்பதால் கருவிழி என்று நினைத்திருப்போம். அப்படி இல்லையாம். காதலி கருவாக இருப்பதால் கருவிழியாம்! காதல் மோடில் இருந்தால் இப்படித்தான் எல்லாமே ஜாலியாக காதலாகிவிடும். நான் கொஞ்ச நாளாகவே காதலுக்கு அடுத்தபடியான ‘டையபர்’ மோடில் இருப்பதால் அந்தளவுக்கு இறங்க முடிவதில்லை. பாதகமில்லை. சின்னஞ்சிறுசுகள் சந்தோஷமாக இருக்கட்டும்.
நாம் மீண்டும் சிலேடைக்கே வருவோம்.
இங்கே ‘கரு’ என்ற ஒரே சொல் முதலில் ‘கருப்பு’ என்ற பொருளிலும் பிறகு அதுவே ‘காதல்கரு’ என்ற இன்னொரு பொருளாகவும் வருவதால் இதை செம்மொழி சிலேடை என்பார்கள்.
அதென்ன செம்மொழி சிலேடை?
சிக்கன் பிரியாணியில் ‘தலப்பாக்கட்டி’, ‘பாய்கடை’ என்றெல்லாம் இருப்பது போல சிலேடையில் இரண்டு வகை உண்டு.
மேலே சொன்னது ஒரு வகை.
அதில் ஒரு சொல் நிறைய பொருள்.
இரண்டாவது பிரியாணி சாரி இரண்டாவதின் பெயர் பிரிமொழி சிலேடை.
இதில் ஒரு சொல் – அதை பிரித்து பார்த்தால் இன்னொரு பொருளில் வரும்.
அவ்வை சண்முகி / பஞ்சதந்திரத்தில் பாதி டைலாக் இந்த வகை சிலேடை தான்.
‘உங்களுக்கு தான் அவரு முதலியாரு. எனக்கு
முதலி யாரோ!’ – பிரிமொழி சிலேடை
‘அவா அவா அவாவா ஆத்துக்காராவா கூட்டிண்டு அவாவா ஆத்துக்கு போங்கோ. அதான் என்னுடைய அவா!’
அவா=அவரவர் /ஆசை என்ற பொருள்களில் மாறிமாறி வருவதால் செம்மொழி சிலேடை
கமல், கிரேஸி மோகன் வரை வந்துவிட்டு கம்பரை பார்க்காது போனால் சாமி குத்தம் ஆகிவிடும். அதனால் கம்பரிஸத்தில் இருந்து எனக்கு பிடித்த சிலேடை பாடல் கீழே.
‘மீன் கொண்டு ஊடாடும் வேலை
மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல்,
சிற்றிடை, சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ; உன்
வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும்வண்ணம்,
இராமனைத் தருதி என்பால்!
அதாவது,
“மீன்களை வைத்து விளையாடும் கடலை உலகம் புகழ,
வண்டுகள் தேன் எடுத்து விளையாடும் கூந்தலுடையவளான சீதையை கொண்டு வந்து நீ விளையாடு.
பதிலுக்கு, உன் வாள் வீரத்தை இந்த உலகமே காணும்படி ராமனை வென்று அவனை எனக்கு விளையாட தா ! “ என்று ராவணனிடம் சொல்கிறாளாம் சூர்ப்பனகை.
ராவணனும் ‘இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு சிஸ்டர்’ என்று மதி மயங்கி காலத்துக்கும் நமக்கெல்லாம் தசரா விடுமுறை கிடைக்க வழி செய்கிறார் அந்த மனசிருக்கே
என்ன இருந்தாலும் என் ஃபேவரிட் புலவர் பாணபத்திர ஓணான்டி எழுதிய பிரிமொழி சிலேடை தான்!
“மன்னா.. மாமன்னா
நீ ஒரு மா..மா மன்னா!!
பூ மாரி தேன் மாரி
நான் பொழியும்
நீ ஒரு மொள்ளமாரி
அரசியலில் நீ
தெள்ளியதோர் முடிச்சவக்கி “
Leave a Reply