நமக்கு பிடித்தவருக்கு நம்மை பிடிக்கும் தருணம் வாய்க்கும் வரையில் காதல் ஒரு வித பித்து நிலையிலேயே நம்மை வைத்திருக்கும். அந்த சமயத்தில் ஊருக்குள் இருக்கும் அத்தனையும் நமக்கு அவுட் ஆப் போக்கஸில் இருக்கும் (சில பேருக்கு ஊரே அவுட் ஆப் போக்கஸ் தான்!).
அனுப்பிய வாட்சப்ப் மெசேஜ் read என்று வந்தும் பதில் வராத அந்த தருணங்கள் காதலின் வெயில் பொழுதுகள். அப்பொழுதுகளுக்கு கொஞ்சமும் பச்சாதாபமே இருக்காது.
இது போதாதென்று காத்திருப்பின் வாஞ்சைக்கும் முடிவற்ற தவிப்பிற்கும் இடையில் சிக்கி அல்லாடும் மனதை மேலும் இம்சிக்கவே வெயில்மழை பொழியும் – அது கிளப்பிவிட்டு செல்லும் நினைவுகளின் புழுக்கம் எந்நேரமும் நமக்கு பிடித்தவரைப் பற்றிய எதையாவது ஒன்றை நினைவூட்டியே நம்மை பாடாய் படுத்தி எடுத்து விடும்.
இவ்வகையான பதில் வராத கணங்களின் கனத்தை சுமக்கும் மனங்களின் நிலையை
“நடைப்பாதை கடையில் உன் பெயர் படித்தால் நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும் “ என்று கனா காணும் காலங்கள் பாடலில் நா முத்துக்குமார் எழுதியிருப்பார். இது போல பார்க்கும் அனைத்தும் நமக்கு பிடித்தவராக தெரிவது ஒரு நிலை என்றால்
இந்த பாடு படுத்துவதற்கு அந்தத் திருவாயை திறந்து ‘‘பிடிச்சிருக்கு’ன்னு சொன்னா குறைஞ்சா போச்சு’ என்பது அடுத்த நிலை .
“என்னை வாட்டும் வேலை ஏனடி
நீ சொல்வாய் கண்மணி என்று சேது படத்தில் அறிவுமதி வரிகளில் விக்ரம் புலம்புவாரே அதைப்போல.
இதற்கும் அடுத்த நிலை உண்டு.
‘நான் என்ன எனக்காகவா கேக்கறேன்.. உன்னால தான் நான் இப்படி புலம்பறேன்னு நாளைக்கு இந்த ஊர் உன்னை குத்தம் சொல்லுமே.. அதுக்காகவது பதில் சொல்லேன் ! என்ற நிலை.
பாம்பே’யில் வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் கண்ணே
அதற்காகத்தான் வாடினேன்.. என்பதைப்போல
இதெல்லாம் 21வது நூற்றாண்டு புலம்பல்கள் .
இதற்கும் முன்னோடியாக சூப்பர் சீனியர் ஒருத்தி இருக்கிறாள். சாட்சாத் ஸ்ரீவில்லிபுத்தூர் காதல்காரி தான்.
ஆண்டாள் ஒரு கிளி வளர்த்தாளாம். கிளி சொன்னதை , கேட்டதைத்தானே திரும்ப திரும்ப சொல்லும் ; ஆண்டாள் வளர்த்த கிளியும் அவளைப்போலவே எப்போது பார்த்தாலும் நாராயணா கண்ணா என்றே பேசிக்கொண்டிருந்ததாம்.
கண்ணனுக்காக நோன்பு நோற்றும், விடிய விடிய கதை பேசியும், அவனுக்கு பிடித்ததையெல்லாம் செய்து கொடுத்தும் அவன் வராத வேதனையில் இருந்த ஆண்டாளுக்கு நாளாக நாளாக இந்த கிளியின் தொல்லை பெருந்தொல்லையாக மாற ,ஒரு நாள்
ஏய் கிளியே.. சும்மா இருக்கமாட்ட.. நான் ஒருத்தி இங்க புலம்பறது போறாதுன்னு நீ வேற எப்போ பார்த்தாலும் கோவிந்தா கோவிந்தான்னு சொல்லி கடுப்பேத்திட்டு இருக்க..! என்று சொல்லி பார்த்திருக்கிறாள். கிளி கேட்பதாய் இல்லை.
‘வேளாவேளைக்கு சோறு சாப்பிட்டு தெம்பா இருக்கிறதால தான இந்த பேச்சு உனக்கு.. இரு என்ன பண்றேன் பாரு” என்று கிளிக்கு பட்டினி போட்டாளாம். அப்போதும் கிளி ‘உலகளந்த பெருமானே! இவள் என்னை பட்டினி போடுகிறாள்’ என்று பேச ஆரம்பித்து விட்டதாம்!
அடக்கடவுளே.. என்று நொந்துக்கொண்ட ஆண்டாள், கண்ணனிடம் ,
இந்த நிலைமை நமக்கு தேவையா.. கண்ணா ?! இந்த கிளி பேச்சில் எல்லாம் விழுவானேன்.. இதற்காகவாவது என்னை கல்யாணம் செய்து துவாரகைக்கு மருமகளாக என்னை கூட்டிக் கொண்டு சொல்லக்கூடாதா ? என்று நாச்சியார் திருமொழியில் நொந்துக்கொள்கிறாள்.
கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகு-அளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
நன்மை இழந்து தலையிடாதே
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராபதிக்கு என்னை உய்த்திடுமின்.
1000 வருடங்களுக்கு முந்தைய தமிழ் தான் என்றாலும் இப்போதும் படித்ததும் மேலோட்டமாகவே புரியும் அளவிற்கு எவ்வளவு இளமை. அதனால் தான் ஒவ்வொரு முறையும் உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே என்கிறோம் போல
நிற்க!
நம்மில் பெரும்பான்மையானோர் சின்ன வயதில் ,
ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி இருக்கிற கிளிக்குள்ள தான் அசுரனோட உயிர் இருக்குதாம் என்ற கதை கேட்டிருப்போம்.
அது போலவே
இங்கே இந்த பாட்டில்
கூடு = உடல்
கிளி = உயிர் என்ற பொருளில் படித்துப்பார்த்தால் இன்னும் இனிமையான பொருள் தரும் பாசுரம் இது
Art : Krishna for Today
Leave a Reply