தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எழுத்தாளர் ப்ரீத்தி வசந்த்’தின் பக்கங்கள்

Tell me about yourself என்று நேர்காணலில் கேட்பார்கள். இந்த பக்கம் வரை எட்டிப்பார்த்த உங்களின் மைன்ட் வாய்ஸ்ஸூம் அது தானே. 🙂

நான் ப்ரீத்தி வசந்த்.

திகட்ட திகட்ட தினம் தமிழ் படிக்கும் காதல்க்காரி.

கொஞ்சம் மழையும் நிறைய காதலும் மனதிற்குள் தேக்கி வைத்து கவிதை படைத்துக்கொண்டிருக்கிறேன்.

முடிவடையாத நாளின் எச்சம் கனவாவதைப்போல சொல்ல மிச்சமுள்ள பிம்பங்கள் சில என் சிறுகதைகளாகிவிடும்.

இதற்கிடையில் வள்ளுவனும் ஆண்டாளும் கம்பனும் பாரதியும் எதையாவது படிக்க வைத்து இம்சிப்பார்கள். சேமித்து வைக்க தோதில்லாமல் அவை கட்டுரைகளாக்கி விடுவதுண்டு.

அனுபவமோ ஆற்றாமையோ, பெருந்தாகமோ என் கீபோர்ட் கசிந்தவற்றையெல்லாம் கொஞ்சமேனும் சேகரிக்கும் முயற்சியே இந்த வலைதளம்

எழுத்தும் வாசிப்பும் ஒரு காலானுபவம். தொடங்குதல் மிக எளிது. முடிப்பதென்பது முடியாத காரியம். எனவே ஒரு கூழாங்கல்லினைப் போல கடந்து வரும் வழிகளெங்கும் பண்பட்டு தொடர்கிறது என் எழுத்துப் பயணம்.

கவிதை, சிறுகதை, மொழிப்பெயர்ப்பு, இலக்கியம் பாட்காஸ்ட் என்று இப்போதைக்கு பிரித்து வைத்து என் படைப்புகளை சேர்த்திருக்கிறேன். இன்னும் சிறார் இலக்கிய படைப்புகள், பட்டிமன்ற தரவுகள் சேர்க்க வேண்டியுள்ளது. அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும் என நினைக்கிறேன். அதுவரை வலைத்தளத்தில் சேர்த்துள்ளவற்றை படித்து மகிழுங்கள் 🙂

இது நேரம் அவரை வாசித்தமைக்கு அன்பும் நன்றியும். 🙂

சமூக வலைதளங்களில் ஃபாலோ செய்ய கீழே க்ளிக்குங்கள்

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்!

காந்தி உலக மையம் நடத்திய உலகளாவிய தமிழ் கவிதைப்போட்டியில் முதல் பரிசு -2021 ( நடுவர் கவிஞர் சிநேகன், கவிஞர் பழநி பாரதி, அறிஞர் பர்வீன் சுல்தானா)

*****************************

யாரும் பார்க்காதவொரு மதியப்பொழுதின் மரநிழலில்

இளங்காதல் நெஞ்சமிரண்டு இமைகள் மூடி

விரல்கள் கோர்ப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

சட்டென மென்தென்றல் லேசாக வருடிட

மரக்கிளைத் தூளியில் அசந்துறங்கும் சிசுவின்

முதல் சிரிப்பைப் பார்த்திருக்கிறீர்களா?

ஒரு மழை நின்ற நாளில் மரப்பொந்தில்

பாதி நனைந்தக்  கூட்டை சரிப்படுத்தும்  

தாய்ப்பறவையின் கண்களைப் பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்ததுண்டு!

நாடி நரம்பெல்லாம் ரணம் பாய

‘சட் சட்’ என்று நடுநெஞ்சில் வெட்டுப்பட

மண்ணிலிருந்து இழுத்த நீர்த்துளிகளை

என் ஆணிவேரெல்லாம் அழுதே மீண்டும் நிலத்தில் விட..

மர(ண) வலியை எப்போதேனும்அனுபவித்திருக்கிறீர்களா ?

இதோ இப்போது நான்அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்!

அது சரி,

மரணிக்கும் போது ஆழ்மனதின் நினைவுகள் மீள் மின்னல்களாய்  வந்து போகுமாமே?!

இன்னும் கொஞ்ச நேரம் நீளும் என் ஆதியுணர்வு அடங்குவதற்குள்,

செல்வியும் மணியும் சாயங்காலம் வந்தால்

நான் வெறும் மரம் மட்டும் அல்ல என்று மறக்காமல் சொல்வீர்களா?

வியாபாரம் முடியும் வரை தன் குழந்தைக்குத்  தூளி  கட்ட

லட்சுமி அக்கா என் மரக்கிளையைத் தேடி வருவதற்குள்    

நானிருந்த இடத்தில் சின்னஞ்சிறு

மரக்கன்றொன்றை  நட்டுவிட்டு செல்வீர்களா?

கடைசியாக,

நானோ என்னுள் மிச்சமான எதுவோ

மீண்டும் எங்கேனும் துளிர் விடும் வரை

துளி ஈரம் கொஞ்சமேனும்  

உங்களுக்குள் விதைப்பீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *