Your cart is currently empty!
சிறுகதை
எந்த ஒரு தீர்மானமும் மெனக்கெடலும் இல்லாமல் மனிதர்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு அவ்வளவு பிடிக்கும்!
சின்ன வயதிலிருந்து எனக்கு மிக பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு இது தான்.
நாங்கள் குடியிருந்த ஊரிலிருந்து எனது பள்ளி இருக்கும் ஊருக்கு வர ஒரு மணிநேர பஸ் பிராயணம் செய்ய வேண்டும். போக வர இரண்டு மணி நேரம். நான் அப்போது மிகவும் சிறு பிள்ளை என்பதனால் கூட ஒரு ஆயாம்மா வீட்டிலிருந்து பள்ளி வரை கூட்டி சென்று விடுவார். அந்த காலக்கட்டத்தில் எனக்கு பள்ளி நினைவுகளை விட பேருந்தில் பயணித்த நினைவுகளே அதிகம் இருக்கின்றன. இன்றளவும் அந்த நெரிசலான ஜன்னல் நினைவுகள் மனதிற்கு அத்தனை ரம்மியமானவை.
சரி என்னோடு அந்த பேருந்தில் நீங்களும் ஏறிக்கொள்கிறீர்களா? அதோ அந்த நெரிசலான பேருந்தில் உங்களுக்கென்று ஒரு ஜன்னல் இருக்கை ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். உபயம் : ஆயாம்மா 🙂 இனி இறங்கும் அவரை அந்த ஜன்னலும் ஜன்னல் வழி தெரியும் ஒரு துண்டு வானமும் நம்முடையது தான்!
சட்டென ஒரு சிறு அழுத்தம் உள்ளங்கைகளில் பரவுகிறதா? வேறொன்றுமில்லை. கைவிரல்களை ஒருபக்கமாய் ஆயாம்மா அழுத்தமாக பிடித்திருக்கிறார். அவ்வளவுதான்!
சரி. பேருந்து புறப்பட்டுவிட்டது. நகர்ந்து கொண்டே இருக்கும் போது கொஞ்சூண்டு ஜன்னல் வழி தூரத்தில் அதோ ஒரு வயல் தெரிகிறதா. அந்த பக்கம் ஒரு சிறுவனும் ஆளும் நடந்து போகிறார்கள் பாருங்கள். அவர்கள் இப்போது என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? அப்பன் நினைக்கும் போதே அவர்கள் பேசுவதை போன்று ஒரு சம்பாஷனை எனக்கு கேட்கிறது. உங்களுக்கும் கேட்கிறதா? ரமேசுக்கு இன்றைக்கு காய்ச்சலாம்! அவனுக்கு கள்ள போகவே பிடிக்கவில்லையாம். கூட வரும் ரமேசின் சித்தப்பா சத்தமாக சிரித்து அவனை கேலி செய்கிறார். இப்பத்தான் ஒரு சொம்பு தேங்காத்தண்ணி குடிச்சுட்டு வாரோம்.. ஏன்டா கதை அளக்குற?!’
பேருந்து நகர்ந்து இப்போது ஒரு பெட்டிக்கடை வந்துவிட்டது. இங்கே வேறு மனிதர்கள் இருக்கிறார்கள். அதனாலென்ன வம்படியாக ரமேசையும் சித்தப்பாவையும் இங்கே உட்கார வைத்துவிடலாம். மீண்டும் பேருந்து நகர இப்போது ஒரு கல்லூரி நிறுத்தம் வருகிறது. ரமேசு வளர்ந்து கல்லூரிக்கு போக நிற்கிறான். சித்தப்பாவிற்கு வயதாகி விட்டது. அதோ அந்த டீகடை ஒரத்தில் டிப்டாப்பாக நிற்பது ரமேசு தான்! பக்கத்தில் சித்தப்பா- இப்போது தாத்தா வயதாகிவிட்டது! ‘ஏலேய் ரமேசு.. சின்ன வயசுல வரப்புல வரும்போது எனக்கு காய்ச்ச அடிக்குது சித்தப்பா பள்ளிக்கூடம் போல ன்னு அழுதுட்டே வருவ..இப்போ காலேஜூ போற! பெரியாளாகிட்டடா மவனே!’ என்கிறார் பாருங்களேன்.
இப்படிதான் என் நெரிசலான ஜன்னல் வழி எனக்கு பழக்கமாகிற மனிதர்கள் – அவர்கள் சொல்லும் கதைகள் எனக்கு சொல்லி மாளாது . எங்கோ பார்த்த உருவம், எப்போதோ எங்கேயோ கேட்ட சம்பாஷனையின் நினைவுகள். சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் கதிரொளி பட்டதும் கோர்த்துக்கொள்கிற நிறங்களின் தொடர் பயணங்கள் போல நிறைகின்றன மனதில் கதைகளும் முகங்களும்!
2010-11 தொடங்கி சிறுகதை எழுதி வருகிறேன். முதல் சிறுகதையான ‘ஒரு நாள் கடவுள்’ தென்றல் என்னும் அயலக தமிழர் மாதாந்திர இதழில் வெளியான போது நீங்கள் என்னை பார்த்திருக்க வேண்டும். இதுவரை எனக்குள்ளே வாஞ்சையாய் சுற்றிக்கொண்டிருந்த கதைகளுக்கு சின்ன சிறகொன்று அழகாக முளைத்திருக்கிறது என்றதும் ஆர்ப்பாட்டமாய் இருந்தது.
அதிலிருந்து சில கதைகள் எனக்குள்ளேயும் சில கதைகள் காற்று வெளியிலும் பறந்து வருகின்றன. அவற்றில் சில இங்கே உங்களுக்காக!